ரூ. 45 லட்சம் வரை செலவுசெய்து தனது உயிரை நடிகர் சிரஞ்சீவி காப்பாற்றியதாக நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலும் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்று கொடுத்தது. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார்.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னதாக பொன்னம்பலத்திற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்து போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து திரும்பி உள்ளார். அவருக்கு அவருடைய உறவினர் மற்றும் இயக்குனரான ஜெகநாதன் சிறுநீரகத்தை வழங்கி இருக்கிறார். இந்நிலையில் தான் இந்த மோசமான நிலைமைக்கு சென்றதற்கு காரணம் தன்னுடைய சகோதரர் தான் என்று பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய சகோதரர் தனக்கு பீரில் விஷத்தை கலந்து கொடுத்ததால் தனது கிட்னி பெயிலியர் ஆனதாக பொன்னம்பலம் கூறியுள்ளார். தன்னுடைய உடல்நிலை குறித்து அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் விசாரிக்கவே இல்லை என்று குற்றம் சாட்டிய பொன்னம்பலம் அஜித்தை தனது சொந்த தம்பியாக நினைத்ததாகவும் ஆனால் அவர் ஒரு போன் கூட செய்யவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதேபோன்று விஜய்யும் தனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை என்று பொன்னம்பலம் வருத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொன்னம்பலம் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து பொன்னம்பலம் பேசியதாவது- உடல்நிலை சரியில்லாதது குறித்து நடிகர் சிஞ்சீவியிடம் சொன்னேன். அவர் ஐதராபாத் வரமுடியுமா என்று கேட்டார். நான் குடும்பம் இங்கே இருப்பதை தெரிவித்தேன். அதற்கு அவர் ஒன்றும் கவலைப்படாதீங்க. அப்போலோ போங்க. எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார். டயாலிசிஸ் செய்வதற்கு உதவி செய்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ரூ. 45 லட்சம் வரை செலவு செய்து என்னை காப்பாற்றினார். அப்போலோவில் எனக்கு என்ட்ரி ஃபீஸ் கூட வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood