ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சின்னப்ப தேவர் சான்டோ சின்னப்ப தேவரான கதை

சின்னப்ப தேவர் சான்டோ சின்னப்ப தேவரான கதை

சின்னப்ப தேவர்

சின்னப்ப தேவர்

சினிமாவில் எத்தனையோ பேருக்கு பட்டப்பெயர்கள் இருக்கின்றன. பல பிறர் தந்தது, பல தாங்களே வைத்துக் கொண்டது. அவை எல்லாவற்றிலும் வித்தியாசமானது சின்னப்ப தேவருக்கு கிடைத்த சான்டோ பட்டம்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்ப தேவர் என்ற அகண்ட பெயரியின் சுருக்கம்தான் எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர். எம்ஜிஆரை வைத்து 17 படங்கள் தயாரித்துள்ளார். அவரது தேவர் பிலிம்ஸ் குறித்தும், தேவர் - எம்ஜிஆர் நட்பு குறித்தும், அவரது முருக பக்தி குறித்தும் தனித்தனியாக புத்தகம் போடலாம். அந்தளவு சுவாரஸியமும், தனித்துவமும் மிக்கவை. சான்டோ என்ற பட்டப்பெயர் கொண்ட ஒரே சினிமாக்காரர் இவர்தான்.

தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு பட்டப்பெயர்கள் கிடைப்பது வாய்ப்பு கிடைப்பதைவிட எளிதானது. ஒரு படம் நடித்தவர்களே பெயருக்குப் பின்னால் புரட்சி, எழுச்சி என்று பட்டப்பெயர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். இன்று ஒருபடி மேலேபோய், முதல் படத்தின் போதே பட்டப்பெயர் சேர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் இவை மற்றவர்களால் வைத்த பெயராக இருக்காது, அவர்களே வைத்துக் கொண்டதாக இருக்கும்.

நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் சீனிவாசனுக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பெயர் கிடைத்தது. வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானதால் நடிகர் மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தியானார். இதே போல் ஒவ்வொருவருடைய பட்டப்பெயருக்குப் பின்னாலும் ஒரு கதையுண்டு. பிறகு வந்த புரட்சி, எழுச்சி பெயர்களை சொல்லவில்லை. அவைகள் அந்தந்த நடிகர்களால் தங்களுக்கு தாங்களே வைத்துக் கொண்டவை. இதில் சான்டோ என்ற பட்டப்பெயர் சற்று விசித்திரமானது.

கோவையை அடுத்த ராமநாதபுரம்தான் சின்னப்ப தேவரின் பிறப்பிடம். வறுமை காரணமாக ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. மில் தொழிலாளி, ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனியின் தொழிலாளி என பல இடங்களில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தபின் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என பல வியாபாரங்களில் ஈடுபட்டார். சோடா தயாரித்து விற்று இருக்கிறார்.

நமக்கு இது தெரியாதே என்று தயங்கும் குணம் தேவருக்கு இல்லை. பால் வியாபாரம் செய்த காசில் நண்பர்களுடன் இணைந்து நல்ல தங்கை என்ற படத்தை தொடங்கினார். கம்பெனி காரை தொழில் பார்ட்னர்கள் தவறாக பயன்படுத்திய பிரச்சனையில் அப்படத்திலிருந்து வெளியேறி, சென்னையில் தேவர் ஃபிலிம்ஸை தொடங்கினார். முதல் படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த தாய்க்குப்பின் தராம்.

இந்தப் படத்திற்கு முன்பே எம்ஜிஆரை தேவருக்கு தெரியும். இருவரும் ஒன்றாக ஜுபிடர் பிக்சர்ஸில் வேலை செய்திருக்கிறார்கள். அந்த நட்பில் எம்ஜிஆர் தாய்க்குப்பின் தாரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதோடு, அப்போது முன்னணியில் இருந்த பானுமதியை படத்தில் நாயகியாக நடிக்கவும் வைத்தார். படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் எம்ஜிஆருக்கும், தேவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சண்டையில் முடிந்தது. இருவரும் அதன் பிறகு பேசிக் கொள்ளவில்லை.

தேவர் அடுத்து நீலமலை திருடன் என்ற படத்தை எடுத்தார். அது வெற்றி பெற்றது. அதன் பிறகு செங்கோட்டை சிங்கம், வாழ வைத்த தெய்வம், யானை பாகன், கொங்குநாட்டு தங்கம் என பல படங்கள் தயாரித்தார். இதில் ஜெமினி நடித்த வாழ வைத்த தெய்வம் சுமாராகப் போனது. மற்ற படங்கள் பிளாப். மீண்டும் கோவைக்கெ போகலாம் என்று திட்டமிட்டிருந்தபோது வாஹினி ஸ்டுடியோ நாகி ரெட்டியின் உதவியால் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார்.

Also read... கமல் படத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

படத்துக்கான பாடல் பதிவு முடிந்த நேரம் எதேச்சையாக எம்ஜிஆரைப் பார்க்க, ஐந்து வருட சண்டையை மறந்து இருவரும் கட்டிக் கொண்டார்கள். ஒலிப்பதிவு முடிந்த பாடல்களைக் கேட்ட எம்ஜிஆர், அந்தப் படத்தில் தானே நடிப்பதாக கூறினார். அப்படி ஐந்து வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்தார். அந்தப் படம்தான் தாய் சொல்லை தட்டாதே.

சின்னப்ப தேவர் செய்த பல வேலைகளில் மில் வேலையும் ஒன்று. நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். உடம்பை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். நாற்பதுகளின் இறுதியில் மில்லில் வேலை செய்த போது அதன் வெள்ளைக்கார முதலாளி இவரது கட்டுமஸ்தான உடம்பைப் பார்த்து, ஓங்கி ஒரு குத்து விட்டிருக்கிறார். சின்னப்ப தேவர் அந்த குத்துக்கு அசையவில்லை. வியந்து போன அந்த வெள்ளைக்காரர், சின்னப்ப தேவரின் தோளில் தட்டி பாராட்டி, இனிமேல் நீ சான்டோ என்று கூறியுள்ளார். அன்றிலிருந்து சின்னப்ப தேவரின் பெயருக்கு முன்னால் சான்டோ என்ற பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டது.

சினிமாவில் எத்தனையோ பேருக்கு பட்டப்பெயர்கள் இருக்கின்றன. பல பிறர் தந்தது, பல தாங்களே வைத்துக் கொண்டது. அவை எல்லாவற்றிலும் வித்தியாசமானது சின்னப்ப தேவருக்கு கிடைத்த சான்டோ பட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment