Home /News /entertainment /

சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும் - ஓர் அரிய காம்பினேஷன்

சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும் - ஓர் அரிய காம்பினேஷன்

சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும்

சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும்

பத்து வயதில் நாட்டிற்காக கொடி பிடித்த சின்ன அண்ணாமலை, தனது அறுபதாவது வயது கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தால் மரணமடைந்தார்.

  • News18
  • Last Updated :
தியாகச் செம்மல், தமிழ்த் தொண்டர் என்றெல்லாம் புகழப்படும் சின்ன அண்ணாமலைக்கு இந்தப் பெயர் வரக் காரணம் ராஜாஜி. 1944 இல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்துக்கு நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அந்த விழாவில் கலந்து கொண்ட ராஜாஜி அண்ணாமலையை சின்ன அண்ணாமலை என்று அழைக்க அந்தப் பெயரே நிலைப்பெற்றது.

சின்ன அண்ணாமலை பிறந்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குட்டி வட்டம், ஓ சிறுவயல் என்ற கிராமம். தனது பத்தாவது வயதிலேயே காங்கிரஸ் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் கையால் மூவர்ணக் கொடியினை பெற்றுக் கொண்டார். போராட்டம் நடத்தியதால் பள்ளியில் தேர்வு எழுத முடியாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மகனை திருத்துவதற்காக சின்ன அண்ணாமலையின் தந்தை அவரை மலேசியாவுக்கு அனுப்ப, அங்கும் சங்கம் அமைத்து, மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். மலேசிய ரப்பர் தோட்டத்தில் பணபுரியும் பெண்கள் இவரது பேச்சைக் கேட்டு கள்ளுக்கடைகளுக்கு தீ வைக்க, மலேசிய அரசு சின்ன அண்ணாமலையை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. இந்தியா வந்தபின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றார். தேவகோட்டையில் இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் பேருந்து, நீதிமன்றம் உள்பட பலவற்றை கொளுத்தினர். கலவரம் வெடித்து 65 பேர் கொல்லப்பட்டனர். சின்ன அண்ணாமலைக்கு சிறைவாசம் கிடைத்தது.ராஜாஜியின் ஆலோசனையின்படி சென்னை வந்த இவர் தமிழ்ப் பண்ணை என்ற புத்தகாலயத்தை தொடங்கி புத்தகங்களை பதிப்பித்தார். பூட்டை உடையுங்கள், அன்ன விசாரம் போன்ற புத்தகங்களை வெளியிட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்ட தியாகி, புத்தக நிறுவனர், எழுத்தாளர் சின்ன அண்ணாமலைக்கும் சிவாஜி கணேசனுக்கும் என்ன தொடர்பு? சிவாஜி காங்கிரஸில் இருந்த போது, அவர் மீது இருந்த மதிப்பிலும், இளைஞர்களை காங்கிரஸில் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் 1969 இல் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை தொடங்கினார் சின்ன அண்ணாமலை.சிவாஜி  ரசிகன் என்ற இதழையும் கொண்டு வந்தார். அதற்கு முன்பே அவர் பல படங்களை தயாரித்திருந்தார். சிவாஜி ரசிகர்மன்றத் தலைவராக இருக்கையில் தனது நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கும் வாய்ப்பை சிவாஜி சின்ன அண்ணாமலைக்கு வழங்கினார். அந்தப் படம் ஜெனரல் சக்ரவர்த்தி. இந்தப் படத்தை டி.யோகானந்த் இயக்க, சின்ன அண்ணாமலை தயாரித்தார். சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, கவிதா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு, டி.பி.முத்துலட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர். எம்எஸ்வி படத்துக்கு இசையமைத்திருந்தார். சரியாக 44 வருடங்களுக்கு முன்னால் 1978 ஆம் ஆண்டு , இதே ஜுன் மாதம் 16 ஆம் நாள் ஜெனரல் சக்ரவர்த்தி வெளியானது. இன்று இப்படம் தனது 45 வது வருடத்தில் நுழைகிறது. 1980 இல் சிவாஜி நடிப்பில் உருவான  தர்ம ராஜா படத்தையும் சின்ன அண்ணாமலை தயாரித்தார்.பத்து வயதில் நாட்டிற்காக கொடி பிடித்த சின்ன அண்ணாமலை, தனது அறுபதாவது வயது கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தால் மரணமடைந்தார். வாழ்ந்த 60 வருடங்களில் 50 வருடங்களை நாட்டிற்காக அர்ப்பணித்த ஒருவர் சிவாஜி கணேசன் பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கியதும், அதன் தலைவராக செயல்பட்டதும், சிவாஜியை வைத்தே படம் தயாரித்ததும் உலகில் ஒன்றோ இரண்டோ பேருக்கு மட்டுமே அமையும் அதிர்ஷ்ட நிகழ்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sivaji ganesan, Entertainment

அடுத்த செய்தி