காட்ஸில்லாவை காப்பாற்றிய சீனா

காட்ஸில்லாவை காப்பாற்றிய சீனா

காட்ஸில்லா Vs காங்

சுமார் 200 மில்லியன் டாலர்களில் தயாரான காட்ஸில்லா ஏப்ரல் 4 வரை 285.80 மில்லியன் டாலர்களை வசூலித்து நஷ்டத்திலிருந்து தப்பிக்க சீன வசூலே முக்கிய காரணம்.

  • Share this:
    ஹாலிவுட்டின் 'பி' கிரேட் ஆக்‌ஷன் படங்களின் அபிரிதமான சந்தையாக சீனா விளங்குகிறது. சில்வஸ்டர் ஸ்டாலோனின் தி எக்ஸ்பென்டபிள்ஸ் போன்ற படங்கள் அமெரிக்காவை விட சீனாவில் அதிகம் வசூலித்தன. சூப்பர் ஹீரோக்கள், காட்ஸிலாக்கள், டைனசர்கள் மட்டுமின்றி ஸ்டாலோன் போன்ற மசில்மேன்களும் சீனாவை நம்பியே உள்ளனர். அதிலும் இந்த கொரோனா காலத்தில் ஹாலிவுட் படங்களின் ஆபத்பாந்தவனாக சீனா மாறியுள்ளது.

    ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியான பிரமாண்டம் காட்ஸில்லா வெர்சஸ் காங். இந்தியாவிலும் இந்தப் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அமெரிக்காவில் மார்ச் 31 இப்படம் திரைக்கு வந்தது. அதற்கு முன்னதாக மார்ச் 25 மெக்சிகோ, ஆஸ்ட்ரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து என பல நாடுகளில் இப்படம் வெளியானது. சீனாவில் மார்ச் 26. ஐந்து தினங்கள் கழித்து மார்ச் 31 இல் அமெரிக்காவில் வெளியானது.

    யுஎஸ்ஸில் மார்ச் 31 புதன் முதல் ஏப்ரல் 4 ஞாயிறுவரை முதல் 5 தினங்களில் இப்படம் 48.5 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதேநேரம் மார்ச் 26 வெள்ளி முதல் மார்ச் 28 ஞாயிறுவரை மூன்று தினங்களில் சீனாவில் இப்படம் 69.20 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதாவது யுஎஸ்ஸைவிட அதிக வசூல். இதற்கு முக்கிய காரணம், திரையரங்குகளின் எண்ணிக்கை. இப்படம் யுஎஸ்ஸில் 3,064 திரையரங்குகளில் வெளியானது. சீனாவில் 38,437 திரையரங்குகள்.

    இரண்டாவது வார இறுதியில் (ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை) சீனாவில் இப்படம் 43.50 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. வார நாள்களையும் சேர்த்து முதல் பத்து தினங்களில் சீன வசூல் 136.50 மில்லியன் டாலர்கள். உலகம் முழுவதும் சேர்த்து ஏப்ரல் 4 வரை வசூல் 285.80 மில்லியன் டாலர்கள். இதில் ஏறக்குறைய 50 சதவீத வசூல் (136.50 மில்லியன் டாலர்கள்) சீனாவிலிருந்து கிடைத்துள்ளது.
    யுஎஸ்ஸில் வார நாள்களில் இப்படத்தின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு அங்கு வேகமாக பரவிவரும் கொரோனாவும் ஒரு காரணம். எனினும், சீன வசூலுடன் ஒப்பிடுகையில் யுஎஸ் வசூல் மிகவும் பின்தங்கியே உள்ளது.

    சுமார் 200 மில்லியன் டாலர்களில் தயாரான இப்படம் ஏப்ரல் 4 வரை 285.80 மில்லியன் டாலர்களை வசூலித்து நஷ்டத்திலிருந்து தப்பிக்க சீன வசூலே முக்கிய காரணம். அந்தவகையில் ஹாலிவுட் படத்தை சீனா காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம்.
    Published by:Sheik Hanifah
    First published: