கள்ளன் படத்தை இயக்கிய சந்திரா தங்கராஜை மிரட்டி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தமிழகத்தில் திரையிட பாஜக மேற்கொண்டு வரும் அராஜகங்கள் குறித்தும் தமுஎகச சார்பில் தமிழக அரசின் நடவடிக்கை கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளன், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்கள் திரையிடும் பிரச்னை
- தமிழ்நாடு அரசு உடனே தலையிட தமுஎகச கோரிக்கை
1. சந்திரா தங்கராஜ் இயக்கிய “கள்ளன்” என்ற படம் தணிக்கை முடிந்து வெளியாகவிருந்த நிலையில், அப்படம் அதே தலைப்பில் வெளியாவதற்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனையடுத்து 2022 மார்ச் 18 அன்று படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் மேற்கொண்டிருந்த நிலையில், தீர்ப்புக்கு விரோதமாக சாதியமைப்புகளைச் சேர்ந்த சிலர் இயக்குநரை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.
இயக்குநரை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க சொற்களால் ஏசி மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், கள்ளன் படத்தைத் திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திரையரங்கங்களை அச்சுறுத்தி ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரையரங்குகள் பலவற்றை படத்தைத் திரையிடாமல் பின்வாங்கச் செய்துள்ளனர். இவர்களது மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிட்டுள்ள திரையரங்குகள் சிலவற்றில் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தணிக்கை வாரியத்திற்கும் நீதிமன்றத்திற்கும் மேலான அதிகாரமுடையவர்களாக தம்மை நிறுவிக்கொள்ளும் இவர்களை விமர்சித்து சந்திரா தங்கராஜியின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஆதரிக்கிற ஆளுமைகளையும் மிரட்டி வருகின்றனர். இந்த அத்துமீறல்கள் குறித்து இயக்குநர் சந்திரா தங்கராஜ் இணையவழியில் புகார் செய்தும் காவல்துறை எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளாதிருக்கிறது. தமிழ்நாடு அரசு இனியும் தாமதிகாமல் கள்ளன் படத்தை திரையிடுவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இப்படத்தை அச்சமின்றி வெளியிடுவதற்கான பாதுகாப்பை வழங்குமாறும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
2. காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம், இஸ்லாமிய வெறுப்பினால் காஷ்மீரின் தனித்தன்மையை அழித்து, ராணுவ வல்லாதிக்கத்தின் முனையில் காஷ்மீரிகளின் வாழ்வுரிமையை அழித்து வருகிற ஒன்றிய ஆட்சியாளர்களின் அரசியல் பிழைகளுக்கு ஆதரவானது. நடப்புண்மைகளுக்கு சற்றும் பொருந்தாவகையில் அப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் பண்பாட்டு ஊழியர்களும் தேர்ந்த திரைக்கலைஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்களான பாரதிய ஜனதா கட்சியினரும், அரசின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் அப்படத்தை விதந்தோதுகின்றனர். அதை எப்படியாவது பார்க்க வைத்துவிட்டால் தமது கருத்தியல் செல்வாக்கு மண்டலத்தை பரவலாக்க முடியும் எனக் கருதி அப்படத்தை நாட்டின் பல இடங்களிலும் இலவசமாக காட்டி வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா பாணியை பின்பற்றும் அனிருத்!
திருப்பூர் போன்ற இடங்களில், இஸ்லாமிய மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில் உள்ள திரையரங்கில் வெளியிடச் செய்துள்ளனர். படம் முடிந்து வெளியேறப் போகும் பார்வையாளர்களை தடுத்து நிறுத்தி, தேசப்பற்று உறுதிமொழி என்கிற பெயரில் இஸ்லாமியர் மீதான வெறுப்பை உறுதிமொழியாக ஏற்கும்படி வற்புறுத்தி நிறுத்தி வைக்கின்றனர். திரைப்பட ஒளிபரப்பு விதிகளுக்கு மாறான இச்செய்கையின் மூலம் தமிழ்நாட்டில் மதமோதல்களையும் பதற்றத்தையும் உருவாக்க பாரதிய ஜனதா கட்சியினரும் அதையொத்த சங் அமைப்பினரும் வழிவகுப்பதாக தமுஎகச குற்றம்சாட்டுகிறது. காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தமது அரசியல் நிகழ்ச்சிநிரலின் பகுதியாக்கிக்கொண்டு மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது” இவ்வாறு அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema