Home /News /entertainment /

கைப்புள்ள காலை உடைச்சது கட்டதுரை இல்லையாம்...

கைப்புள்ள காலை உடைச்சது கட்டதுரை இல்லையாம்...

கைப்புள்ள

கைப்புள்ள

படப்பிடிப்பில் சமாளிப்பதில் சுந்தர் சி. டாக்டரேட் வாங்கியவர். 2003 இல் அவர் வின்னர் படத்தை எடுக்கையில் பிரசாந்துக்கு அத்தனை மார்க்கெட் இல்லை. காமெடியை சேர்த்து முன்பகுதி கதையை எழுதியிருந்தார்.

  • News18
  • Last Updated :
இயக்குனர் சுந்தர்.சி இடமிருந்து கமர்ஷியல் படம் பண்ணும் இளம் இயக்குனர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. மணிரத்னம் சன் ரைஸை எடுக்க திட்டமிட்டால், அவர் நினைத்தபடி சூரியன் உதயமாகாதபட்சத்தில் ஒருவாரம்கூட காத்திருந்து படமாக்குவார். அவருக்கு அது சாத்தியம். பட்ஜெட் போட்டு, இத்தனை நாளில் படத்தை முடிப்பேன் என்று எழுதிக் கொடுத்து படம் எடுக்க வருகிறவர்களுக்கு அது சாத்தியமில்லை. காலையில் எடுக்க வேண்டிய சூரிய உதயத்தை எடுக்க முடியவில்லையா? பேக்கப் என்று நகர முடியாது. படக்குழுவினரை வைத்து அதற்கு மாற்றாக வேறு ஒன்றை படமாக்கியாக வேண்டும். இல்லையெனில் தயாரிப்பாளருக்கு அன்றைய புரொடக்ஷன் காசு நஷ்டம். அடுத்த நாள் வேறு இயக்குனரை பார்க்கப் போய் விடுவார்.

படப்பிடிப்பில் சமாளிப்பதில் சுந்தர் சி. டாக்டரேட் வாங்கியவர். 2003 இல் அவர் வின்னர் படத்தை எடுக்கையில் பிரசாந்துக்கு அத்தனை மார்க்கெட் இல்லை. காமெடியை சேர்த்து முன்பகுதி கதையை எழுதியிருந்தார். கைப்புள்ள வேடத்தில் நடிக்க வடிவேலை தேடிப்போனால், கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டிருந்தார் அவர். இந்த காலை வச்சு நடிக்க முடியாதண்ணே என்று அவர் சொல்ல, கால் உடைஞ்ச மாதிரி நொண்டிகிட்டே நடிக்க முடியுமா என்று சுந்தர் சி. கேட்டிருக்கிறார். வடிவேலும் அப்படி நடந்து காட்டியிருக்கிறார்.வடிவேலு படம் முழுக்க நொண்டியபடி வருவார் என்பதற்காக பிறகு சேர்க்கப்பட்டதுதான், என் சங்கத்து ஆள அடிச்சவன் யார்டா என்று கட்டதுரையை அவர் சந்திக்கச் செல்லும் காட்சி.

'இதுவரைக்கும் யாரும் என்னை தொட்டதில்ல...'

'போன மாசம்தானே உன்னை அடிச்சேன்...'

'அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்... இப்போ போறேன். ஆனா, திரும்பி...'

'திரும்பி...?'

'வரமாட்டேன்னு சொல்ல வந்தேன்...'

கட்டதுரையும் ஆள்களும் அவரை அடிக்க,

'வேணாம்... வேணாம்... வலிக்குது... அழுதுருவேன்...'

அவர்  அழ, திரையரங்கே விழுந்து விழுந்து சிரித்தது. கட்டதுரை அவர் காலில் அடிப்பதாகவும், அதன் பிறகு அவர் நொண்டிக் கொண்டே நடப்பதாகவும் சுந்தர் சி. சந்தர்ப்பத்துக்கேற்ப வைத்த அந்தக் காட்சி எவர்கிரீன் காமெடிக் காட்சியானது.அதேபோல் வின்னர் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் பிரசாந்த் நாயகி கிரணை தேடி அவளது ஊருக்கு கிளம்புவதோடு வடிவேலின் பகுதி முடிந்துவிடும். எடுத்தவரை வடிவேலு பகுதிகள் சிறப்பாக வந்ததாலும், இடைவேளைக்குப் பின்பும் அது தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பதாலும் பிறகு சேர்த்துக் கொண்டதுதான், பிரசாந்துடன் அவர் நடத்தும் காமெடி களபேரங்கள். அப்போது அதிக மார்க்கெட் இல்லாமல் இருந்த பிரசாந்தை மட்டும் வைத்து இரண்டாவது பாதியை நகர்த்த முடியாது என்ற சுந்தர் சி.யின் சமயோஜித புத்தியால் நமக்கு மறக்க முடியாத அருமையான காமெடிக் காட்சிகள் கிடைத்தன. இருப்பதை வைத்து சிறப்புற செய்வதற்கு கைப்புள்ள, கட்டதுரை காட்சிகளைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

சுந்தர் சி.யிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடாத விஷயமும் உண்டு. அதே வின்னர் படத்தில் கிரணை சிலர் இரவில் தூக்கிக் கொண்டு போக, பிரசாந்த் சண்டையிட்டு அவரை காப்பாற்றுவார். கதைப்படி இரவு எடுக்க வேண்டிய அந்த சண்டைக் காட்சியை பகலில் பில்டர் போட்டு எடுத்து இரவு போல் காட்டியிருப்பார். கலகலப்பு படத்தில் அஞ்சலி இரவில் வீட்டைவிட்டு ஓடும் காட்சியையும் இதேபோல் பகலில் பில்டர் போட்டு எடுத்திருப்பார். சூரிய ஒளியில் விழும் நிழல்கூட அந்தக் காட்சியில் தெரியும். ஆறு மணிக்கு மேல என்ன ஷுட்டிங் என்ற அசட்டையே இதற்கு காரணம். ஆனால், இவை அந்தப் படங்களை ரசிக்க தடையாக இருந்ததில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

Also read... கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குனர்களை இணைத்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட்

இன்னொரு கொசுறு தகவல், தினம் 24 மணி நேரம் ஏதாவது ஒரு சானலில் வின்னர் பட காமெடி ஓடிக் கொண்டு இருக்கிறது. அப்பேர்ப்பட்ட படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கடன் சுமையால் அனைத்தையும் இழந்து தி.நகர் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை செய்தார். வின்னர் காமெடிக் காட்சி ஒருமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஒரு ரூபாய் தயாரிப்பாளருக்கு தரப்பட்டிருந்தாலும்கூட இந்நேரம் அவர் கோடீஸ்வரராக இருந்திருப்பார். காப்பிரைட் சட்டம் சரிவர இல்லாததன் விளைவு இது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vadivelu, Sundar.C

அடுத்த செய்தி