கொரிய இயக்குனர் பாங் ஜுன் ஹோ மீண்டும் தலைப்புச் செய்திகளில். அவர் அடுத்து வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்குகிறார்.
தென்கொரியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாங் ஜுன் ஹோ. இவரது மெமரிஸ் ஆஃப் மர்டர், மதர் திரைப்படங்கள் தமிழக ரசிகர்களிடையே புகழ்பெற்றவை. படத்துக்குப் படம் வித்தியாசமான ஜானர்களை முயன்று பார்க்கிறவர் இவர். இவரது மெமரிஸ் ஆஃப் மர்டர், மதர் திரைப்படங்கள் த்ரில்லர் வகையைச் சேர்ந்தவை. மர்டர் மிஸ்ட்ரி.
ஆனால், கதையோட்டத்தில் தத்துவார்த்தமான விஷயங்களை கலந்து அசாதாரணமாக்குவதில் இவர் கில்லாடி. இவரது ஸ்னோபியர்சர் திரைப்படம் அதற்கு சான்று. அதிகார ஏகாதிபத்தியத்தை கிண்டல் செய்கிறவர். அவரது ஹோஸ்ட் மற்றும் பாரசைட் திரைப்படங்கள் அதற்கு உதாரணம். பாரசைட் திரைப்படம் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை என மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இவர் அடுத்து வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை எழுத்தாளர் எட்வர்ட் அஸ்டனின் வெளிவரவிருக்கும் மிக்கி 7 நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது.
இதில் பிரதான வேடத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிக்கிறார். 2008 இல் வெளியான டுவிலைட் திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற பேட்டின்சன் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் உள்பட முக்கியமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்திருக்கும் பேட்மேன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த பல இயக்குனர்கள் ஹாலிவுட்டில் படம் இயக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கொரிய திரைப்படங்கள் அளவுக்கு அவர்களின் ஹாலிவுட் படங்கள் பெயரை சம்பாதித்து தந்ததில்லை. அந்த வரலாறை பாங் ஜுன் ஹோ முறியடிப்பார் என நம்புவோம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.