'சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன். நான் சூர்யாவின் ரசிகையும் கூட’ என பாலிவுட் நடிகை ஈஷா தியோல் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் மூத்த நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகள் நடிகை ஈஷா தியோல். இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருக்கிறார். கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் ஈஷா தியோல், சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

ஈஷா தியோல்
அப்போது பேசிய அவர், “சென்னை எப்போதுமே என் சொந்த ஊர் போன்றது. சிறுவயதில் விடுமுறைக்காக இங்கே என் தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி செல்வதைப்போல, இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சென்னை வந்தாலே சாப்பிடுவதற்கு நல்ல ‘ரசம்’ கிடைக்கிறது. நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆயுத எழுத்து படத்தில் ஈஷா தியோல்
இப்போது குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை. ஆனால் நல்ல படங்கள் என தெரிய வந்தால், அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன். நான் சூர்யாவின் ரசிகையின் கூட. தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
திருமணம் ஆகிவிட்டால் நடிகைகள் அக்கா அல்லது அண்ணி கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள நிறைய படங்கள் வருகின்றன. ஓடிடி தளங்களும் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்