புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு 3 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியான நிலையில், இதனை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ட்ரைலரும், 3 பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையடுத்து படத்திற்கான முன்பதிவு சில தினங்கள் முன்பு துவங்கியது. இதனை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்கிறார் விஜய். இதற்கிடையே சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி வீட்டு திருமணத்தில் நடிகர் விஜய்யும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டனர். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சிலர் இதனை திட்டமிட்ட சந்திப்பு என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடல்!
அதோடு புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியையும் சந்தித்திருந்தார் விஜய். இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று டிக்கெட் விலையை 3 மடங்கு உயர்த்த புதுச்சேரி அரசு அனுமதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!
இதனை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ”தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? - தமிழக மக்கள் கேள்வி. சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்தது இதற்குத்தானா? - சினிமா ரசிகர்கள் கேள்வி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.