நகைச்சுவை உணர்வைப் பிரதானமாக கொண்டு காமெடி.., சென்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன், ஆபாசமில்லா கிளாமர் என ஐஞ்சுவை விருந்து படைத்த இயக்குநர் சுந்தர்.சி.யின் பிறந்த நாளான இன்று அவரின் திரைப்பயணம் குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
90 களின் தமிழ் சினிமா காதலிலும் மோதலிலும் முக்குளித்து கொண்டிருந்த பொழுது கமர்சியல் கதையில் நகைச்சுவையை பிரதானப்படுத்தி குடும்பத்தோடு திரையரங்கிற்கு திரை ரசிகர்களை படையெடுக்க செய்தார் இயக்குனர் சுந்தர் சி. கார்த்திக்கை நாயகனாக வைத்து சுந்தர்.சி இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ நகைச்சுவை கதையில் தனி பாதை போட்டது. உருட்டுக்கட்டை காமடிகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் உள்ளத்தையும் அள்ளியது ‘உள்ளத்தை அள்ளித்தா’.
‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே வகைமையைச் சேர்ந்த மேலும் சில திரைப்படங்களில் கார்த்திக் - கவுண்டமணி- சுந்தர்.சி கூட்டணி இணைந்தது. இந்தப் பட்டியலில் ‘மேட்டுக்குடி’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’ என ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது.
ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’, கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’ .சுந்தர்.சியை ஸ்டார் இயக்குனர் ஆக்கியது. சரத்குமாரை வைத்து 'ஜானகிராமன்', அஜித்துடன் 'உன்னைத்தேடி', பிரபுதேவாவுடன் இணைந்து 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'உள்ளம் கொள்ளை போகுதே', கார்த்திக்குடன் 'அழகிய நாட்கள்' என்று தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒவ்வொருவிதமாகக் கொடுத்து அசத்திக்கொண்டே இருந்தார் சுந்தர்.சி.
பிரஷாந்தை வைத்து சுந்தர்.சி இயக்கிய ‘வின்னர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ‘வைகைப் புயல்’ வடிவேலுவின் உச்சத்தைத் தொடங்கிவைத்தது. அத்திரைப்படத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் ‘கைப்புள்ள’ காமடி ட்ராக்தான் முதன்மைக் காரணம் என தாராளமாகச் சொல்லலாம். அதைத் தொடர்ந்து ‘கிரி’ மற்றும் ‘லண்டன்’ திரைப்படங்களில் சுந்தர்.சி-வடிவேலு இணையின் நகைச்சுவை இன்றும் டிஜிட்டலில் ஹிட் அடிப்பதை பார்க்கலாம்.
2006-ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ திரைப்படத்தின் மூலம் நாயக நடிகராக அறிமுகமானார் சுந்தர் சி. சுந்தர்.சி யே இயக்கி நாயகனாக நடித்த ‘நகரம்: மறுபக்கம்’ வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக வசூல் மழையை அள்ளியது.
ஒரு இயக்குநராக சுந்தர்.சி-யின் 25-வது திரைப்படமான ‘கலகலப்பு’ அவரின் ட்ரேட் மார்க் காமடி காட்சிகளால் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவைப் படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. அதே வரிசையில் இணைந்தது அரண்மணை 1 மற்றும் அரண்மனை 2 திரைப்படங்கள். ரசிகர்களைக் கலகலப்புடன் இருக்கச் செய்வதே சுந்தர் சி யின் வெற்றி ரகசியம் என்றால் அது மிகையல்ல.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, Entertainment, Sundar.C, Tamil Cinema