கொரோனாவை தடுக்க தெருவில் இறங்கி மாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ் ஆரி

முதியவருக்கு மாஸ்க் அணிவிக்கும் ஆரி

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக்பாஸ் வின்னர் ஆரி பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் 2314 பேர் இன்று நோய்த்தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

  இதுவரை மொத்தம் 8,78571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்திருப்பதாகவும், 9,33,434 ஆக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது, தடுப்பூசி முகாம் நடத்துவது என சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான நடிகர் ஆரி கோவையில் பொதுமக்களுக்கு முக்கவசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சியை ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

  தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற, ஆயிரத்து 118 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  சனிக்கிழமை மட்டும் 659 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனிமனித இடைவெளியை பின்பற்றாத 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர்.

  கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாத பயணிகள், உணவகங்கள், டீக்கடைகளில் முகக்கவசம் அணியாதவர்கள் என 30 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

  கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத, 1,824 பேருக்கு சனிக்கிழமை ஒரே நாளில் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத 150 பேருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
  Published by:Sheik Hanifah
  First published: