ரைஸா மீது வழக்கு தொடுப்போம் - ஃபேசியல் செய்த மருத்துவர் விளக்கம்

ரைஸா மீது வழக்கு தொடுப்போம் - ஃபேசியல் செய்த மருத்துவர் விளக்கம்

ரைஸா வில்சன்

ஃபேசியல் செய்து முகம் வீங்கியதாக சமீபத்தில் ரைஸா வில்சன் தெரிவித்திருந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரைஸா வில்சன். பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றதாகவும் அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

  மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்றுவிட்டதாக கூறுவதாகவும் ரைஸா குற்றம்சாட்டியிருந்தார்.  இந்நிலையில் இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் பைரவி செந்தில் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “முகத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெற வைக்கும் சிகிச்சை முறைதான் அவர் மேற்கொண்டார். இந்த சிகிச்சை எடுத்தால் சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று ரைஸாவிடம் எழுதி ஒப்புதல் வாங்கினோம். அது அவருக்கும் நன்றாக தெரியும். இதே சிகிச்சையை ரைஸா பலமுறை செய்திருக்கிறார். அப்போது எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.  ஆனால் கடைசியாக கடந்த 16-ம் தேதி சிகிச்சை எடுத்துக் கொண்ட போது லேசான பக்கவிளைவு ஏற்பட்டிருக்கிறது. சரியான முறையில் மருத்துவ அறிவுரைகளை பின்பற்றாததால் அவருக்கு முகம் வீங்கியிருக்கலாம்.

  ஆனால் அந்தப் பிரச்னை மிக தீவிரமானதோ ஆபத்தானதோ அல்ல. முகத்தை எந்த விதத்திலும் சேதப்படுத்தாது. எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்திருந்தாலும் அவரது போட்டோவை பதிவிட்டு எங்கள் மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியிருக்கிறார். தோல் பிரச்னைகளுக்காக எங்களது மருத்துவமனை கொடுக்கும் சிகிச்சையால் மக்களிடம் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
  ரைஸாவின் குற்றச்சாட்டால் எங்கள் மருத்துவமனையின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது வழக்கு தொடுப்போம். ரைஸா மன்னிப்பு கேட்டு இழப்புக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கு முழு பொறுப்பும் ரைஸா தான். ரைஸா வைத்த குற்றச்சாட்டைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு எப்போதும் போல் நாங்கள் சிறந்த சேவையைக் கொடுப்போம்.” இவ்வாறு டாக்டர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: