தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம், கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் மும்முரமாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
மக்களின் வாக்குகளை தங்கள் வசப்படுத்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிவிக்க போட்டி போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு சினிமா நட்சத்திரங்களை பிரசாரத்தில் ஈடுபடுத்த தமிழக பாஜக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகர் செந்தில், “நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்று கூறியிருந்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நடிகை குஷ்பு, ராதாரவி, கவுதமி, நமிதா, பொன்னம்பலம், ஆர்.கே.சுரேஷ், நடிகை ஆர்த்தி, காயத்ரி ரகுராம், விஜயகுமார், திரைப்பட இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான மோகன் வைத்யா அக்கட்சியிலிருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இத்தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடிகர் ரஞ்சித், விக்னேஷ் ஆகியோர் அமமுகவில் உறுப்பினர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.