Director Thamira: என்னை பிக்பாஸ் செல்ல ஊக்கப்படுத்தியவர் நம்முடன் இல்லை - ஆரி உருக்கமான இரங்கல்

கொரோனா தொற்றுக்கு பலியான இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு நடிகர் ஆரி அர்ஜூனன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு பலியான இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு நடிகர் ஆரி அர்ஜூனன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 55. இவர், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் அவரையும், பாரதிராஜாவையும் இணைத்து ‘ரெட்டைச்சுழி’ என்கிற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியோடு சினிமாவில் இணைந்து பணியாற்றியவர் என்பதால் அவரை வைத்து இரண்டாவது படமாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தை இயக்கினார்.

மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்க கதை தயாரிப்பில் இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் தாமிரா இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார். இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரைபிரபலங்கள் பலரும் இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஆரி அர்ஜூனன் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில், “என் முதல் வெள்ளித்திரை பயணத்திற்கு வித்திட்ட இயக்குனரும் மாபெரும் கதாசிரியருமான தாமிரா இன்று நம்மோடு இல்லை என்ற செய்தி எனக்கு பேரதிர்ச்சி கொடுத்து என்னை மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தபோது எனக்கு சிறியதாக தயக்கம் இருந்தது, அப்போது நீ சரியாக இருக்கும்போது உன்னை யார் மாற்ற இயலும் என்று என் தயக்கத்தை போக்கி என்னை பிக்பாஸில் அடி எடுத்து வைக்க ஊக்கப்படுத்தினார். அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

அவர் மறைவினால் அவரது எண்ணங்களில் தோன்றிய எத்தனையோ சிறந்த கதைகளும் மரணித்து விட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு நடிகர் ஆரி அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: