2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் ரிலீஸ் - தயாரிப்பாளர்கள் முடிவு

தியேட்டர்

2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விபிஎஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதால் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர்கள் முதலில் அறிவித்தனர்.

கியூப் மற்றும் யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில் இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று அறிவித்தது. இதனால் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளதாவது, “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். வி.பி.எஃப் சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று வி.பி.எஃப்-ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது.

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் வி.பி.எஃப் - ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, வி.பி.எஃப் கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.அதே சமயம் வி.பி.எஃப் கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: