Home /News /entertainment /

இரண்டு நாட்களாக கண்ணீர் வடிக்கிறேன்... பாலு வந்துருடா - பாரதிராஜா உருக்கமான வீடியோ

இரண்டு நாட்களாக கண்ணீர் வடிக்கிறேன்... பாலு வந்துருடா - பாரதிராஜா உருக்கமான வீடியோ

பாரதிராஜா | எஸ்.பி.பி

பாரதிராஜா | எஸ்.பி.பி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வர வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

  கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை 13-ம் தேதி நள்ளிரவில் திடீரென மோசமடைந்தது.

  இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பயனாக அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடந்து மருத்துவக்குழுவினர் அவரைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே அவர் குணமடைந்து வர வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய பாலு, டேய் பாலு.. எஸ்.பி.பாலு எழுந்து வாடா. வாடா என்ற இந்த உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டு காலமாகிறது. பள்ளி நாட்களில் கூட என் நண்பர்களோடு இந்த அளவுக்கு பழகியதில்லை.

  நன்றாக ஞாபகமிருக்கிறது. உனக்குத் தெரியுமா? ஆயிரம் நிலவே உன்னுடைய முதல் பாடல். நீ உச்சத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து கொண்டிருக்கிறாய். எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரி. அது சிதம்பரமானாலும் சரி. வேலூர் ஆனாலும் சரி. நீ ஒரு ஃபியட் கார் வைத்திருப்பாய். அதற்கு டிரைவர் வைக்காமல் நீயே தான் ஓட்டிக் கொண்டு செல்வாய். அப்போது உன்னுடனே நானும் வருவேன். ஏன்? நீ தூங்கிவிடக்கூடாது என்பதற்காக உன்னுடனேயே கதை சொல்லிக் கொண்டே நான் வருவேன்.

  உன்னிடம் ஒருநாள் என்னை கே.விஸ்வநாதனிடம் உதவியாளராக சேர்த்துவிடச் சொன்னேன். அப்போது நான் உதவி இயக்குநர் இல்லை. என்னடா கதை எதுவும் வைத்திருக்கிறாயா என்று என்னிடம் நீ கேட்டாய். ஆம் என்றேன். வேறு ஒரு ஐடியா இருப்பதாக கூறினாய்.
  படிக்க: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  படிக்க: திடீரென ஏற்பட்ட மரணம் - கதறி அழுத ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை

  அப்போதெல்லாம் National Film development corporain என்ற அமைப்பு இருக்கும். ஒன்றரை லட்சத்தில் படம் எடுக்கலாம் என்ற யோசனையை என்னிடம் நீ சொன்னாய். நன்றாக நினைவிருக்கிறது. பிரசாத் ஸ்டுடியோ ரெக்கார்டிங் தியேட்டருக்கு வெளியே புல்வெளியில் அமர்ந்து ‘மைல்’ என்ற கதையை நான் உணக்குச் சொல்கிறேன். உனக்கு பிடித்திருக்கிறது. ஆரம்பச் செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நீ எனக்கு கொடுக்கிறாய். அப்போதுதான் உனக்கு பல்லவி பிறந்திருக்கிறாள். நான் முதன்முதலில் உன்னுடைய மகள் பெயரில் தான் ‘பல்லவி புரொடக்‌ஷன்ஸ்’ ஆரம்பிக்கிறேன். சில காரணங்களால் அது நின்று போனது.

  பின்னர் தொடர்ந்து இருவரும் நாம் நட்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை ஞாபகமிருக்கா? கச்சேரிக்காக நெல்லூருக்கு பக்கத்தில் இளையராஜா, நான், பாஸ்கர் எல்லோரும் போய் இருந்தோம். உங்கள் வீடு ஆச்சாரமான வீடு. அங்கே அமர்ந்து சாப்பிட்டோம். இரவு எங்களுக்கு சில பலவீனங்கள் இருக்கிறது. இது ஆச்சாரமான வீடு இங்கு வேண்டாம் என்று வேறு இடத்தைச் சொல்லி எங்களுக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தாய். உன் வீட்டு உப்பை தின்று வளர்ந்திருக்கிறேன். எப்படி எங்களை விட்டுப் போக உனக்கு மனது வரும். வராது. நீ திரும்ப வந்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

  முதல்நாள் ‘16 வயதினிலே’ பூஜை. அதற்கு நீதான் பாட வேண்டும் என்றேன். நீயும் தயாராகிறாய். பூஜை அன்று உனக்கு தொண்டை சரியில்லை மன்னிக்க வேண்டும் என்று சொன்னாய். இல்லையென்றால் ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ பாடல் நீ பாட வேண்டியது. உன்னுடைய இடத்தில் மலேசியா வாசுதேவனை வைத்து பாட வைத்தோம். அதற்குப் பின்னர் ‘நிழல்கள்’ படத்தில் பொன்மாலைப் பொழுது பாடல். இன்றளவும் உலகமே கேட்டு வியக்கும் பாடல். வைரமுத்து அங்கு தான் உதிக்கிறான். பொன்மாலைப் பொழுது நீ பாடலாம் உனக்கு பொன்காலைப் பொழுதுதான் வர வேண்டும்.

  பாலு நான் மட்டுமில்ல. உலகத்திலுள்ள அனைத்து கலைஞர்களும் கண்ணீர் விட்டிருக்கிறோம். இரண்டு நாட்களாக நான் விட்ட கண்ணீர் என் கன்னங்களில் வழியும்போது துடைத்து துடைத்து எறிந்து கொண்டிருக்கிறேன். இந்த வீடியோ பதிவிலும் அது வந்துவிடக் கூடாது என்று நிதானமாக பேச முயற்சிக்கிறேன். பாலு வந்துருவடா. நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, விண், வெளி அத்தனையும் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய். எங்களோடு பழகுகிறாய். இன்னும் ஆயிரம் பாடல்களை பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில்.” என்று கூறி உடைந்து கண்ணீர் வடித்துள்ளார் பாரதிராஜா.
  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: S.P.Balasubramaniyam

  அடுத்த செய்தி