1931 இல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்கள் எடுக்கப்பட்டன. அன்றிலிருந்து ஐம்பதுகள்வரை வெளியான நூற்றுக்கணக்கான படங்களில் 80 சதவீதத்துக்கும் மேலான படங்களின் பிரதிகள் நம்மிடம் இல்லை. புகைப்படம்கூட இல்லாத படங்களின் எண்ணிக்கை ஏராளம்.
ஆரம்ப காலம்தொட்டு தமிழர்களின் பிரதான பண்டிகையான பொங்கலுக்கு படங்களை வெளியிடுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதையடுத்து தீபாவளி பண்டிகைக்கு படங்கள் வெளியாகும். இவையிரண்டும் விசேஷமான தினங்களாக இன்றும் சினிமாத்துறையினரால் கருதப்படுகிறது. இந்தப் பண்டிகைகளின் போது படங்களை வெளியிடுவது ஒரு கௌரவம். பண்டிகை, விடுமுறை எல்லாம் சேர்ந்து வருவதால் வழக்கத்தைவிட வசூல் அதிகமாக கிடைக்கும் என்பது இன்னொரு காரணம்.
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதியும் படங்களை வெளியிடுகின்றனர். ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. சித்திரை ஒன்று சினிமாவைப் பொறுத்தவரை எந்த முக்கியத்துவமும் இல்லாமல் கடந்து போகும். பொங்கல், தீபாவளிக்கு படங்களை வெளியிடுவது போல் சித்திரை ஒன்று அன்று படங்களை வெளியிட ஆரம்பித்தது 1939 இல். அந்த வருடம் சித்திரை 1 ஆம் தேதி பக்த குமணன் (அல்லது) ராஜ யோகி என்ற படம் வெளியானது. இந்தத் தகவலை மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உறுதி செய்துள்ளார். பக்த குமணன் சித்திரை 1 ஆம் தேதி வெளியான பிறகு அடுத்தடுத்த வருடங்களில் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டும் சினிமாத்துறையினருக்கு முக்கியமான நாளாக மாறிற்று.
பக்த குமணன் படத்தின் பிரதிகள் இப்போது கிடைக்கவில்லை. ஆனால், படத்தின் கதை குறித்த தகவல்கள் உள்ளன. கடையேழு வள்ளர்களில் ஒருவரான குமண வள்ளனின் கதைதான் பக்த குமணன் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதனை கே.ரங்காராவ் இயக்கினார். இதில் குமணனாக வி.ஏ.செல்லப்பா நடித்தார். அவரது மனைவி சந்திரவல்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி. முதல் பேசும்படத்தின் நாயகி.
பக்த குமணன் கதைப்படி குமணனின் எதிரியாக வருவது அவரது தம்பி அமணன். இலக்கியத்தில் இளங்குமணன் என்று அறியப்படும் இந்த கதாபாத்திரத்தை அமணன் என்ற பெயரில் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தனர். வி.எஸ்.மணி இந்த வில்லன் வேடத்தில் நடித்தார். பக்த குமணனின் இன்னொரு சிறப்பு, அந்தக் காலத்தில் விலங்குகளை அதிகம் படங்களில் நடிக்க வைப்பதில்லை. புராண, சரித்திரப் படங்களில் குதிரைகள் இடம்பெறும். சில நேரம் யானைகள். பக்த குமணனில் குதிரையுடன் குரங்கையும் நடிக்க வைதததாக தகவல்கள் கூறுகின்றன.
பிரமாதி ஆண்டு, சித்திரைத் திங்கள், முதல் நாள் (14-04-1939) வெள்ளிக்கிழமை பக்த குமணன் (அல்லது) ராஜ யோகி திரைக்கு வந்தது. சித்திரை திங்கள் முதல் நாள் வெளியான முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை இதற்கு கிடைத்தது. இந்தப் படத்திற்குப் பிறகே சித்திரை திங்கள் முதலாம் நாள் படங்களை வெளியிடுவது ஒரு பழக்கமாக மாறியது.
Also read... இந்திரா காந்திக்காக பாதயாத்திரைச் சென்ற சிவாஜி கணேசன்
கொரோனா வருடங்களை தவிர்த்துப் பார்த்தால் சித்திரை முதல்நாள் தமிழ் சினிமாவுக்கு எத்தனை முக்கியமான நாள் என்பது தெரியவரும். 2019 இல் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ழகரம், வாட்ச்மேன், காஞ்சனா 3 ஆகிய படங்கள் சித்திரை திங்கள் முதல்நாளை முன்னிட்டு வெளியாகின. 2017 இல் கடம்பன், பா பாண்டி, சிவலிங்கா படங்கள் வெளியாகின. இப்படி வருடந்தோறும் சித்திரை முதல்நாளில் படங்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு தொடக்கமாக அமைந்த படம் 1939 வெளியான பக்த குமணன் (அல்லது) ராஜ யோகி திரைப்படம் என்பது பலரும் அறியாத தகவல்.
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு அல்ல, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தும் வெகுகாலமாக இருந்து வருகிறது. தமிழறிஞர்கள் ஒரு நூற்றாண்டு காலமாக இதனை எடுத்துரைத்து வருகின்றனர். தை முதல்நாள் பொங்கல். அன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் தமிழ் திரைத்துறையினருக்கு ஒரு பண்டிகை நாள் பறிபோகும். அதனால், சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக யாரையும்விட சினிமாக்காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு சுவாரஸியமான விஷயம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.