Home /News /entertainment /

நான் ஒரு கைதி என வசனம் பேசிய அன்றே கைது செய்யப்பட்ட பாகவதர்

நான் ஒரு கைதி என வசனம் பேசிய அன்றே கைது செய்யப்பட்ட பாகவதர்

தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதர்

பாகவதர் சிறையில் இருந்த போது அவரது ஹரிதாஸ் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. கலைவாணர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

  • News18
  • Last Updated :
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. 1944 நவம்பர் 8 ஆம் தேதி லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் மூன்று பேர் திரையுலகைச் சேர்ந்த ஜாம்பவான்களான தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு.

லட்சுமிகாந்தன் 1940 இல் சென்னையில் சினிமா தூது என்ற சினிமா பத்திரிகையை நடத்தி வந்தார். சினிமா கிசுகிசுவில் அவர் பத்து பயில்வான் ரங்கநாதனுக்கு சமம். யார் யாருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள் என்பது போன்ற கிசுகிசுக்களே சினிமா தூதுவின் உரம். அவற்றில் பெரும்பாலானவை அவராக கற்பனையில் எழுதியவை. அவருக்கு பயந்து தங்களைப் பற்றி எழுதாமலிருக்க சினிமாக்காரர்கள் அவருக்கு காசு தருவார்கள்.
சினிமா தூதுவின் அட்டகாசம் அதிகரித்ததால் பலரும் புகார் செய்து, அந்தப் பத்திரிகைக்கு அரசு மூடுவிழா நடத்தியது.



அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். காகித தட்டுப்பாடு காரணமாக புதிதாக பத்திரிகை தொடங்க ஆங்கில அரசு யாருக்கும் அனுமதி தரவில்லை. அதனால், ஏற்கனவே வந்து கொண்டிருந்த இந்துநேசன் என்ற பத்திரிகையை வாங்கி அதில் தனது கிசுகிசு வாந்திகளை கொட்ட ஆரம்பித்தார் லட்சுமிகாந்தன். அவருக்கு பணம் தராதவர்கள் பட்டியலில் பாகவதரும், என்எஸ் கிருஷ்ணனும் இருந்தனர். இதுதான் லட்சுமிகாந்தனின் பின்னணி.



1944 நவம்பர் 8 ஆம் தேதி இரவு சென்னை புரசைவாக்கத்தில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த லட்சுமிகாந்தனை சிலர் கத்தியால் குத்தினர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் காலமானார். இறப்பதற்கு முன் அவர் சொன்ன தகவலை வைத்து பாகவதர் உள்பட 8 பேரை கைது செய்தனர்.



கைதான அன்று பாவதர் வால்மீகி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் அவர் நடித்த ஹரிதாஸ் பம்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது. கொள்ளைக்காரரான வால்மீகியை கைது செய்து அரசர் முன் நிறுத்துவதாக காட்சி. அதில் பாகவதர், நான் ஒரு கைதி என்று தொடங்கும் வசனத்தை பேசி நடித்தார். அன்று மாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த அன்று, தான் மும்பையில் இருந்ததை நிரூபித்து ஸ்ரீராமுலு நாயுடு வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். மற்ற ஏழு பேர்களில் பாகவதர், கலைவாணர் உள்பட ஆறு பேர் கொலைச் சதியில் தொடர்புடையவர்கள் என நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது.

பாகவதர், கலைவாணர் மேல் முறையீடு செய்தனர். பாகவதரை வைத்து படமெடுக்க அட்வான்ஸ் கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த முன் பணத்தை பாகவதரிடமிருந்து திருப்பி வாங்கிக் கொண்டனர். லேனா செட்டியார் மட்டும் வாங்கவில்லை.
உயர்நீதிமன்றம் அவர்களது குற்றத்தை உறுதி செய்தது. இதனால் பாகவதரும், கலைவாணரும் தங்கள் வழக்கை லண்டன் ப்ரிவீயூ கவுன்சிலுக்கு கொண்டு சென்றனர். 1947 ஏப்ரலில் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு வர, அதன்படி மறுவிசாரணை நடத்தி சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.



பாகவதர் சிறையில் இருந்த போது அவரது ஹரிதாஸ் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. கலைவாணர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், பாகவதருக்கு அதுபோல் அமையவில்லை. வழக்கும், சிறையும் அவரை நிலைகுலைய செய்திருந்தது. தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரும், தங்கத் தட்டில் சாப்பிட்ட தனவானுமான பாவதர் கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி மரணமடைந்தார்.

ஒரு மூன்றாம்தர கிசுகிசு எழுத்தாளனால் ஒரு முதல்தர நடிகனின் வாழ்வு காவிய சோகத்துடன் அஸ்தமித்தது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி