• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Beast: தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ஆங்கில தலைப்புகள்.. காரணம் என்ன?

Beast: தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ஆங்கில தலைப்புகள்.. காரணம் என்ன?

மாஸ்டர் - பீஸ்ட்

மாஸ்டர் - பீஸ்ட்

தமிழின் முன்னணி நடிகரான விஜய் அவரது திரைப்படங்களுக்கு மாஸ்டர், பீஸ்ட் என நேரடி ஆங்கில வார்த்தைகளில் பெயர் சூட்டி வருகிறார்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் ஆங்கில தலைப்பு வைப்பது அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்பொழுது பார்க்கலாம்.

  ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது படத்தின் கதைக்கு நிகரான முக்கியத்துவத்தை பெறுகிறது. இதன் காரணமாகவே தற்போது வரை தமிழ் சினிமாவில் டைட்டில் சர்ச்சைகள் தலைவிரித்து ஆடுகின்றன. ஒரு திரைப்படத்தை ரசிகன் பார்ப்பதற்கு தூண்டும் விதமாக படத்தின் தலைப்பு அமைய வேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் மிகுந்த சிரத்தை மேற்கொள்கின்றனர்.

  Also read: Thalapathy Vijay: விமர்சனங்களை வெற்றிக்கான விதைகளாக மாற்றிய விஜய்!

  சில சமயங்களில் எடாகுடமான தலைப்புகள் படத்திற்கான விளம்பரமாக அமைந்து விடுகின்றன. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற தலைப்பு பல இளைஞர்களை திரையரங்கை நோக்கி ஈர்த்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்த தலைப்பு மட்டுமே தனக்கு 9 கோடி ரூபாய் சம்பாதித்து தரும் என இயக்குனர் மிஷ்கினிடம் தெரிவித்ததாக ஒருமுறை மேடையில் பேசினார் மிஸ்கின். இப்படி தலைப்புகள் வர்த்தக காரணியாக மாறியுள்ள நிலையில் ஆங்கிலத்தில் தலைப்பிடும் வழக்கம் தமிழ் சினிமாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  2006ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர் தமிழில் தலைப்பு இடப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் அப்பொழுது ஆங்கிலத்தில் தலைப்பிட்ட குவாட்டர் கட்டிங் என்ற திரைப்படம் 'வ' என்ற ஒரு எழுத்தை தலைப்பாக காட்டி வரிவிலக்கு பெற்றது. இதேபோல மாஸ் என தலைப்பிடப்பட்ட சூர்யாவின் திரைப்படம் ரிலீஸின்போது மாசு என்கிற மாசிலாமணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதேவேளையில் நல்ல தமிழ் பெயர்களும் தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வரி விலக்குக்காக சில நிபந்தனைகளுடன் பிரத்தியேக குழு ஒன்று அமைக்கப்பட்டது, இந்தக் குழுவின் நிபந்தனைகளுக்கு பெரும்பாலான படங்களின் கதை ஒத்துப் போகாததால் வரிவிலக்கு கிடைப்பது கடினமான ஒன்றாக மாறி வந்த காரணத்தால் பெரும்பாலான இயக்குனர்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே பெயரிடத் துவங்கினர்.

  ஹீரோ, கேம் ஓவர், ஆக்ஷன் என ஹாலிவுட் திரைப்படங்களின் பெயர்கள் போல தமிழ் திரைப்பட டைட்டில்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழின் முன்னணி நடிகரான விஜய் அவரது திரைப்படங்களுக்கு மாஸ்டர், பீஸ்ட் என நேரடி ஆங்கில வார்த்தைகளில் பெயர் சூட்டி வருகிறார். வரிவிலக்கு இல்லை என்பது மட்டும் இதற்கான காரணமாக இல்லாமல் இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் திரைப்படம் என்பதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பொதுவாக ஒரு தலைப்பாக இருக்க வேண்டுமென ஆங்கில தலைப்புகளை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

  Also read: விஜய் 65: ’Beast’ தமிழ் அர்த்தம் என்ன?

  நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியாகிறது. இந்த சமயங்களில் ஒவ்வொரு மொழிக்கும் தனியாக அந்த மொழியில் பெயர் தேடும் சிரமத்தை குறைக்கவே இவ்வாறு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதாகவும் கூறப்படுகிறது.

  நல்ல தமிழ் வார்த்தைகளை பட தலைப்புகளின் வாயிலாக அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சிக்கு இது தடையாக இருப்பதால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முடிந்தவரை தமிழில் பெயர் வைக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே தமிழ் சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: