தமிழ் திரைப்பட உலகின் தற்போதைய உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய் இவரது நடிப்பில் வெளி வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறும். கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றது. மாஸ்டர் படத்தை அடுத்து வரும் ஏப்ரல் 13ம் தேதி அன்று பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது
இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் விஜய்க்காக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் பீஸ்ட் படத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் பயங்கர டிரெண்டிங் ஆன இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் 2வது பாடல் ஜாலியோ ஜிம்கானா சமீபத்தில் வெளியானது. இப்படி வெளிவருவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்ற பீஸ்ட் படம் தொடர்பாக சர்ச்சையும் உருவாகத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏதோ ஓரிடத்தில் பீஸ்ட் படத்திற்காக விஜய் ரசிகர்கள் கட்வுட் வைத்துள்ளனர். அந்த கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வதற்காக இளைஞர் ஒருவர் 25 லிட்டர் கேனில் பாலை ஒற்றைக் கையில் துாக்கி மேலே ஏறும் காட்சி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, இதுகுறித்து தமிழக டிஜிபி சென்னை மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம் ஒரு புகாரளித்துள்ளார். அதில், நடிகர்களுக்கு பெரிய பெரிய கட்டவுட்டுகள் வைப்பதோடு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் இளைஞர்கள் பாலபிஷேகம் செய்வதும், மாலை போடுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Also Read : நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
மேலும், தங்கள் குடும்பத்தைப் பற்றி நினைக்காமல் நடிகர்கள் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூட உதவுவதில்லை என்றும் புகாரில் கூறியுள்ளார். அதனால் தியேட்டர்கள், பொது இடங்களில் நடிகர்களுக்கு கட்டவுட்டுகள் வைப்பதையும், மாலை, பாலபிஷேகம் என்ற பெயரில் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதையும் தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.