மலையாள கவியும், பாடலாசிரியருமான மறைந்த ஓஎன்வி குறுப்பு பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது, முதல்முறையாக கேரளாவை சாராத கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை பார்வதி விமர்சித்துள்ளார்.
"ஓஎன்வி ஐயா நமது பெருமை. ஒரு கவியாகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஒப்பிட முடியாதது: நம் கலாசாரத்தை செழுமைப்படுத்தியது. அவரது பணியால் நமது இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு அவர் பெயரில் விருதளித்து கௌரவிப்பது அவருக்கு அவமரியாதை செய்வதாகும்" என பார்வதி சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். சென்னை பத்மாசேஷாத்திரி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் நிலையில், வைரமுத்து மீதான குற்றச்சாட்டு தூசிதட்டப்பட்டு மீடியாவில் பேசப்பட்டு வருகையில், பார்வதியின் இந்தப் பதிவு தமிழகத்திலும், கேரளாவிலும் பேசுபொருளானது. வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா, அவருக்கு ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வழங்கப்பட்டது முறையா போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, முன்னணி நட்சத்திரங்கள் மௌனமாக இருக்க, பார்வதி ஏன் குரல் எழுப்பினார் என பார்க்க வேண்டியதாகிறது.
பார்வதி ஒரே படத்தில் கேரளம் அறிந்த நடிகையாகிவிடவில்லை. 2006-ல் அவுட் ஆஃப் சிலபஸ் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். அதே வருடம் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் வெளியான நோட்புக் படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அதையடுத்து சத்தியன் அந்திக்காடு இயக்கிய வினோதயாத்ராவில் முகேஷின் தங்கையாக ஒரு சின்ன வேடம். நாயகன், நாயகி திலீபும், மீரா ஜாஸ்மினும். கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த மிலானா படமே, பார்வதி நாயகியாக நடித்த முதல் படம். தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான் படங்களில் நடித்த பிறகே மலையாளத்திலும் நல்ல வேடங்கள் பார்வதிக்கு அமைந்தன. பெங்களூரு டேஸ், எந்நு நின்டெ மொய்தீன், சார்லி, டேக் ஆஃப், உயரே, வைரஸ் என பார்வதி நடிப்பில் உயரே பறக்க ஆரம்பித்தார்.
எந்த வேடத்திலும் தன்னை கரைத்துக் கொள்வது பார்வதியின் தனித்தன்மை. சார்லியில் துடுக்கான 'ப்ரீக் அவுட்' பெண்ணாக நடித்தவர், எந்நு நின்டெ மொய்தீனில் அடக்கமான முஸ்லிம் கதாபாத்திரத்தில் அமர்க்களப்படுத்தினார். அதிகம் ஒப்பனை இல்லாமலே தனது தோற்றத்தில் கதாபாத்திரத்தின் குணாம்சத்தை கொண்டுவரும் திறன் பார்வதிக்கு உண்டு. இன்றைய தேதியில் இந்தியாவின் சிறந்த நடிகைகளில் பார்வதியும் ஒருவர் என்றால் மிகையில்லை.
தமிழகத்தில் பார்வதி என்பதைவிட 'பூ' பார்வதி என்றால் அனைவருக்கும் தெரியும். பூ படத்தில் அனைவரும் கரையக்கூடடிய நடிப்பை பார்வதி வெளிப்படுத்தினார். திரைப்படத்துக்கு வெளியே அவர் ஒரு புயல். சமூகத்திலும், திரைத்துறையிலும் நிலவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் வன்முறைக்கு உள்ளான போது, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர் திலீபை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் பார்வதி முக்கியமானவர். பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீஸன், கீது மோகன்தாஸ் போன்றவர்களின் நிர்ப்பந்தத்தில் திலீப் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
மம்முட்டி நடித்த கஸபா திரைப்படம் வெளியான போது, திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், கஸபா குறித்து விமர்சித்து பேசினார் பார்வதி. அந்தப் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக மம்முட்டியும், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் வில்லியாக வரலட்சுமியும் நடித்திருந்தனர். பெண்களை கொச்சைப்படுத்தும் வசனங்கள், காட்சிகள் மலிந்த படம் அது. மம்முட்டியின் சக போலீஸ் அதிகாரி ஜெகதீஷின் மனைவி மம்முட்டியை ஒட்டி உராய்ந்தபடி உணவு பரிமாறும் காட்சி விரசத்துடன் படமாக்கப்பட்டிருக்கும். மம்முட்டி போன்ற சீனியர் நடிகர் இது போன்ற காட்சியில் எதற்கு நடித்தார் என யாருக்கும் கேட்க தோன்றும். ஆனால், பொதுவெளியில் அதை கேட்டது பார்வதி ஒருவரே. நடிகை ரீமா கல்லிங்கல், நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ், ஒளிப்பதிவாளர் பௌஷியா பாத்திமா, திரைக்கதையாசிரீயர் தீதி தாமோதரன், இயக்குனர் விது வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்ட கருத்தரங்கு அது. பார்வதியின் பேச்சு மீடியாவில் பிளாஷானதும் மம்முட்டி ரசிகர்கள் பார்வதியை சமூகவலைத்தளத்தில் வசைபாடினர். சினிமாவில் கெட்டவர்களை கெட்டவர்களாகத்தானே காட்ட முடியும் என வியாக்கியானங்கள் முன்வைக்கப்பட்டன. கெட்டதை காட்டுவது வேறு, ஹீரோயிசம் என்ற பெயரில் அதை கொண்டாடுவது வேறு என்று பதிலடி தந்தார் பார்வதி. ஆனாலும் மம்முட்டி ரசிகர்கள் அடங்கவில்லை. கற்பழிப்போம், கொலை செய்வோம் என மிரட்டல்கள் தொடர்ந்துவர, போலீஸில் பார்வதி புகார் செய்தார், இரு மம்முட்டி ரசிகர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
2018-ல் நடிகை பாவனா நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நடிகர் சங்கம் சார்பாக எடுக்கப்படும் படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என அப்போதைய நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபுவிடம் கேட்கப்பட்டது. நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட அதற்கு முன்பு எடுக்கப்பட்ட டுவென்டி 20 படத்தில் முக்கிய வேடத்தில் பாவனா நடித்திருந்ததால் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த இடைவேளை பாபு, 'செத்தவர்களை நாம் திருப்பி கொண்டுவர முடியாது. அதேபோலத்தான் சங்கத்திலிருந்து விலகியவர்களையும் திருப்பி அழைக்க முடியாது' என்றார். இந்த மோசமான விமர்சனத்தை கண்டித்து 2018-ல் பார்வதி நடிகர் சங்கத்திலிருந்து விலகினார். நடிகை காரில் கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து திரைத்துறையில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் குரல் கொடுக்க, 'விமன் இன் சினிமா கலெக்டிவ்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட காரணமானவர்களில் பார்வதியும் ஒருவர்.
முஸ்லீம் மீதான வெறுப்பு, முன் தீர்மானத்துடன் அவர்களை அணுகும் போக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய Islamophobia கேரளாவில் அதிகமிருக்கிறது என்றார் பார்வதி. தான் நடித்த டேக் ஆஃப், எந்நு நின்டெ மொய்தீன் ஆகிய படங்களிலும் அவை இருந்ததாகவும், இனி வரும் காலங்களில் தனது படங்களில் அதுபோன்ற விஷயங்களை தவிர்க்க முயல்வதாகவும் அவர் கூறினார். டேக் ஆஃப் திரைப்படம் 2014-ல் ஈராக் நகரை ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பின்னணியில், அதில் சிக்கிக் கொள்ளும் திருமணமான முஸ்லீம் நர்ஸின் போராட்டத்தை சொல்லும் படம். எந்நு நின்டெ மொய்தீன் காதலன் கொல்லப்பட்ட பின்பும், அவன் நினைவாக திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை வாழ்ந்த முஸ்லீம் பெண்ணின் கதை. இது ஓர் உண்மைச் சம்பவம்.
ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் மம்முட்டி போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை விமர்சிப்பதும், நடிகர் சங்கத்தை கேள்வி கேட்டு, அதிலிருந்து விலகி இயங்குவதும் சாதாரணமில்லை. ஒரு நடிகை யோசித்துப் பார்க்க சிரமமான விஷயங்கள். அறத்தின்பால் நின்று இந்த இன்னல்களை தெரிந்தே ஏற்றுக் கொண்டவர் பார்வதி. இதனடிப்படையிலேயே அவர் வைரமுத்துக்கு விருது அளிக்கப்பட்டதையும் விமர்சித்திருக்கிறார். இது சரியா, தவறா என்பது அவரவர் பார்வையை பொறுத்தது. ஆனால், 'பூ' பார்வதிகள் திரைத்துறையிலும், சமூகத்திலும் அபூர்வமானவர்கள் என்பது மட்டும் உண்மை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Parvathy