ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதெல்லாம் ஒரு டியூனா? - எம்எஸ்வியை பழிவாங்கிய சந்திரபாபு

இதெல்லாம் ஒரு டியூனா? - எம்எஸ்வியை பழிவாங்கிய சந்திரபாபு

குலேபகாவலி படத்தின் நா சொக்காப் போட்ட நவாபு

குலேபகாவலி படத்தின் நா சொக்காப் போட்ட நவாபு

எம்எஸ்வி டியூன் போட்டுவிட்டு, எப்படி என்று கேட்க, பழைய கோபத்தில், இதெல்லாம் ஒரு டியூனா, இதுக்கு எப்படி ஆடுறது என்று கேட்டுள்ளார் சந்திரபாபு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1955 இல் டி.ஆர்.ராமண்ணா குலேபகாவலி படத்தை இயக்கினார். ஆயிரத்தோரு இரவுகளில் குலேபகாவலி என்ற பெயரில் வரும் கதையிது. ராமண்ணாவுக்கு முன்பே ஒருமுறை குலேபகாவலி திரைப்படமாகியிருக்கிறது. 1955 இல் வெளியானது இரண்டாவது குலேபகாவலி. இதில் எம்.ஜி.ராமச்சந்திரன், டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோச்சனா, ஜி.வரலட்சுமி, சந்திரபாபு பிரதான வேடங்களில் நடித்தனர். 1955 ஜுலை 29 வெளியான படம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது.

இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். ஜிக்கி பாடிய, நா சொக்காப் போட்ட நவாபு குலேபகாவலியின் புகழ்பெற்ற பாடல்களுள் ஒன்று. இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு உள்ளது. குலேபகாவலி வெளியாவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்த கதையது.

நாற்பதுகளின் முற்பகுதியில் எம்எஸ் விஸ்வநாதன் பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். கோவை சென்ட்ரல்; ஸ்டுடியோவில் எஸ்.என்.சுப்பையா நாயுடு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த போது எம்எஸ் விஸ்வநாதன் அவரது உதவியாளராக இருந்தார். எஸ்.என்.சுப்பையா நாயுடுவின் பெயரில் வரும் பல பாடல்களுக்கு எம்எஸ்விதான் டியூன் அமைத்தது. அது எந்தெந்த பாடல்கள் என்று எம்எஸ்வி, சுப்பையா நாயுடு தவிர யாருக்கும் தெரியாது. சுப்பையா நாயுடு தனது உதவியாளர் டியூன் போட்ட விவகாரத்தை யாரிடமும் சொல்லவில்லை. சென்ட்ரல் ஸ்டுடியோ தனது ஒப்பந்தக்கார்களை கூண்டோடு வெளியேற்றிய போது சுப்பையா நாயுடுவும் அங்கிருந்து வெளியேறினார்.

அப்போதுதான் குற்றவுணர்வு மேலோங்க, தனது ஹிட் பாடல்களுக்கு மெட்டு அமைத்தது எம்எஸ்வி என்ற உண்மையை சென்ட்ரல் ஸ்டுடியோ நிர்வாகிகளிடம் தெரிவித்து, அவருக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். எஸ்.என்.சுப்பையா நாயுடுவிடம் எம்எஸ்வி உதவியாளராக இருந்த 1945 காலகட்டத்தில் சுப்பையா நாயுடு கெச்சலான ஒரு இளைஞனை எம்எஸ்வியிடம் அறிமுகப்படுத்தி, இவன் நல்லா பாடுவேங்கிறான். குரலை டெஸ்ட் பண்ணிப் பாரேன் என்று சொல்லியிருக்கிறார்.

எம்எஸ்வியும் அந்த இளைஞனை பாடச்சொல்லி கேட்டிருக்கிறார். சுப்பையா நாயுடு வந்து, என்ன, நல்லா பாடறானா என்று கேட்ட போது, எங்க பாடறான், டயலாக்கை அப்படியே பேசறான் என்று சொல்ல, அந்த இளைஞன் எம்எஸ்வியை முறைத்துக் கொண்டே வெளியேறியிருக்கிறான். அந்த இளைஞன்தான் சந்திரபாபு.

காலம் வேகமாக நகர்ந்து எம்எஸ்வியை இசையமைப்பாளராகவும், சந்திரபாபுவை நடிகனாகவும் ஆக்கியது. குலேபகாவலி தயாரான போது சந்திரபாபு புகழ்மிக்க நடிகர். அப்படத்தின் கம்போஸிங்கின் போது சந்திரபாபுவும் உடனிருந்திருக்கிறார். எம்எஸ்வி டியூன் போட்டுவிட்டு, எப்படி என்று கேட்க, பழைய கோபத்தில், இதெல்லாம் ஒரு டியூனா, இதுக்கு எப்படி ஆடுறது என்று கேட்டுள்ளார் சந்திரபாபு. எம்எஸ்வி தனது உதவியார்களை டியூனை வாசிக்கச் சொல்லி, அங்கேயே ஆடிக்காட்டி, இதற்கு மேல எப்படி ஆடுறது என்று சொல்ல, சந்திரபாபுக்கு குஷியாகிவிட்டது. இருவரும் அன்றிலிருந்து நெருங்கிய வாடா போடா நண்பர்களாயினர்.

அப்படி எம்எஸ்வி டியூன் போட்டு சந்திரபாபுக்கு ஆடிக்காட்டிய பாடல்தான், “நா சொக்காப் போட்ட நவாபு...”.  எவ்வித இசைப்பாரம்பரியமும் இல்லாமல், தொலைவிலிருந்தே இசையை கற்றறிந்து ஏகலைவனைப்போல இசையில் விற்பன்னரானவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன். இசையமைப்பாளராக மட்டுமின்றி மனிதராகவும் உயர்ந்த இடத்தில் இருந்தவர். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத மேதைகளில் மெல்லிசை மன்னரும் ஒருவர்.

First published:

Tags: Classic Tamil Cinema