ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மலையாள நாவலில் இருந்து உருவாகி, 100 நாட்கள் ஓடிய சிவாஜி படம்… தெலுங்கு, இந்தியிலும் சூப்பர் ஹிட்...

மலையாள நாவலில் இருந்து உருவாகி, 100 நாட்கள் ஓடிய சிவாஜி படம்… தெலுங்கு, இந்தியிலும் சூப்பர் ஹிட்...

பாபு படத்தில் சிவாஜி கணேசன்

பாபு படத்தில் சிவாஜி கணேசன்

ஓடையில் நிந்நு படத்தை 1971 இல் திருலோகசந்தர் தமிழில் ரீமேக் செய்த போது, சத்யன் நடித்த ரிக்ஷா தொழிலாளி வேடத்தில் சிவாஜி நடித்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பி.கேசவதேவ் மலையாளத்தின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர். அவரது ஓடையில் நிந்நு நாவலைத் தழுவி கே.எஸ்.சேதுமாதவன் அதே பெயரில் ஒரு படத்தை இயக்கினார். படத்துக்கான திரைக்கதையை கேசவதேவை வைத்தே அவர் எழுதி வாங்கிக் கொண்டார். சத்யன், பிரேம் நசீர், கே.ஆர்.விஜயா, கவியூர் பொன்னம்மா நடித்த அப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது.

  இந்தப் படத்தில் பப்பு என்ற ரிக்ஷா தொழிலாளியாக சத்யன் நடித்தார். அதுதான் பிரதான வேடம். படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்துக்கு கூடுதல் மெருகேற்றின. இந்தப் படத்தில்தான் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ்கோபி அறிமுகமானார்.

  1965 இல் படம் வெளியான போது அவருக்கு வயது 6. இவருடன் நடித்த இன்னொரு குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி. வயலாறு ராமவர்மாவின் வரிகளுக்கு, தேவராஜன் மாஸ்டர் இசையமைத்தார். பாடல்கள் அனைத்தும் அன்று மலையாளிகளால் முணுமுணுக்கப்பட்டன.

  மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது, மலையாளப் படத்தை இயக்கியவர் தமிழ் ரீமேக்கையும் இயக்கும் போதே அவை வெற்றி பெற்றிருக்கின்றன. மலையாளத்தில் ஒருவரும், தமிழில் வேறொருவரும் இயக்கினால் பெரும்பாலும் அப்படம் தோல்வியே தழுவியிருக்கிறது. படத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் எடுக்கும் போது இந்தத் தவறு நடந்து விடுகிறது.

  ஓடையில் நிந்நு படத்தை 1971 இல் திருலோகசந்தர் தமிழில் ரீமேக் செய்த போது, சத்யன் நடித்த ரிக்ஷா தொழிலாளி வேடத்தில் சிவாஜி நடித்தார். பாபு என்று அவரது கதாபாத்திரப் பெயரையே படத்தின் பெயராக்கினர். சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, நாகேஷ், சிவகுமார் என பலர் பாபுவில் நடித்தனர்.

  சின்ன வயது வெண்ணிற ஆடை நிர்மலாவாக ரோஜா ரமணி நடித்தார். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று.

  பாபு படத்தின் ஸ்பெஷல் அதன் பாடல்கள். வரதப்பா வரதப்பா..., இதோ எந்தன் தெய்வம்... ஆகிய பாடல்கள் அன்றைய ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக இருந்தன.

  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து என்ன சொல்ல... பாடலை பாடியிருந்தார்.

  ஓடையில் நிந்நு படத்தின் வெற்றியின் காரணமாக அப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது போல் 1973 இல் மாரப்புரனி மனுஷி என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

  டி.ராமராவ் இயக்கிய இந்தப் படத்தில் அக்னியேனி நாகேஸ்வரராவும், மஞ்சுளாவும் பிரதான வேடங்களில் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.

  1985 இல் பாபு படத்தை அதே பெயரில் திருலோகசந்தர் இந்தியில் ரீமேக் செய்தார். ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி, ரதி அக்னிகோத்ரி ஆகியோர் நடிக்க ராகேஷ் ரோஷன் இசையமைத்தார்.   படம் இந்தியில் வெள்ளிவிழா கண்டது.

  சரியாக 51 வருடங்களுக்கு முன், 1971 அக்டோபர் 18  இதே நாளில் வெளியான பாபு தமிழகத்தில் 100 தினங்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood