Home /News /entertainment /

13 ஆண்டுகள் காத்திருப்பு... பிரமாண்டத்தின் உச்சம்... அவதார் 2 : சிறப்பு பார்வை

13 ஆண்டுகள் காத்திருப்பு... பிரமாண்டத்தின் உச்சம்... அவதார் 2 : சிறப்பு பார்வை

அவதார் 2 படத்தில் இடம் பெறும் காட்சி.

அவதார் 2 படத்தில் இடம் பெறும் காட்சி.

முதல் பாகத்தில் பிரமாண்ட மிருகங்கள், டிராகன்கள் இருந்தநிலையில், இரண்டாவது பாகத்தில் பெரிய திமிங்கலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் என தனது கற்பனை உலகத்தை விரிவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு, AVATAR : THE WAY OF WATER என தலைப்பிடப்பட்டுள்ளது. பிரமாண்டத்தின் புதிய உச்சமாக தயாராகியுள்ள இத்திரைப்படத்தின் சிறப்புகளை இத்தொகுப்பில் பார்க்கலாம்...

    கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், ஆயிரத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அவதார். படத்தின் வசூல் உலகம் முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தபோதிலும், அதன் தொழில்நுட்பம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. MOTION CAPTURE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், 3டி திரைப்பட வரலாற்றில் புதிய பரிணாமத்தை விட்டுச் சென்றது. பண்டோரா உலகம், நீல நிற பழங்குடி மக்கள், பிரமாண்ட டிராகன்கள் என அதுவரை பார்த்திராக காட்சிகளை நம் கண்முன் நிறுத்தினார் ஜேம்ஸ் கேமரூன்.

    MOTION CAPTURE தொழில்நுட்பத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கேமராக்களில் அவதார் திரைப்படம் படமாக்கப்பட்டது. அதன்படி நடிகர்கள் கேமராக்களை உடலில் அணிந்துகொண்டு நடிப்பதால், அவர்களது முகபாவங்கள் மற்றும் உடல் அசைவுகள் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்டன.



    இதன் தொடர்ச்சியாக, 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துடன் வந்துள்ள ஜேம்ஸ் கேமரூன், இப்படத்துக்கு AVATAR : THE WAY OF WATER என பெயரிட்டுள்ளார். பண்டோரா உலகின் தண்ணீர் தேசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடற்பரப்பில் இருப்பது போலவே காட்சிபடுத்தப்பட்டுள்ளன.



    முதல் பாகத்தில் பிரமாண்ட மிருகங்கள், டிராகன்கள் இருந்தநிலையில், இரண்டாவது பாகத்தில் பெரிய திமிங்கலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் என தனது கற்பனை உலகத்தை விரிவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.



    முதல் பாகத்தில் எடுக்கப்பட்ட MOTION CAPTURE தொழில்நுட்பத்திலேயே இத்திரைப்படமும் உருவாகியிருந்தாலும், கடலுக்கு அடியில் நீந்துவது போல காட்சிகள் இருப்பதால், இம்முறை கலைஞர்கள் கேமராக்கள் உடன் தண்ணீரில் நடித்திருக்கின்றனர். இதற்காக UNDERWATER MOTION CAPTURE தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.



    அவதார் 2 படத்திற்காக பிரத்யேகமாக படகுகள், கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றதற்கான புகைப்படங்களை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ளார். இதற்காகவே 16 ஆயிரம் கிலோ எடையிலான 360 டிகிரி இயக்கக் கட்டுப்பாட்டுத் தளம் (MOTION CONTROL BASE)அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு உள்ள அவதார் 2, வருகிற டிசம்பர் 16ம் தேதி 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இதன்மூலம் உலகளவில் அதிக மொழிகளில் வெளியாகும் திரைப்படம் என்ற பெருமைமையை பெற்றுள்ளது. 3டி, 4K மற்றும் 48 FRAMES PER SECOND என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் ஆவலுக்கு விருந்தளிக்கும் வகையில், மே 6ம் தேதி வரவிருக்கும் டாக்டர் STRANGE படத்தின் நடுவே AVATAR 2-வின் முன்னோட்டம் ஒளிபரப்படுகிறது.



    13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் 2ம் பாகம் வரவுள்ள நிலையில், இதன் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 20ல் அவதார் 3, 2026 டிசம்பர் 18-ல் அவதார் 4 மற்றும் இறுதியாக 2028 டிசம்பர் 22-ல் அவதார் ஐந்தாம் பாகமும் வெளியாகவுள்ளளன..



    தொழில்நுட்பம், பாக்ஸ் ஆபிஸ் என இரண்டிலும் இதுவரை இருந்த அத்தனை அளவுகோல்களையும் கடந்துள்ள அவதார் 2, உலகத்திரை வரலாற்றில் தனித்தடம் பதிக்க காத்திருக்கிறது...

    நியூஸ் 18 தொலைக்காட்சி செய்திகளுக்காக சேஷா டேனியல்
    Published by:Musthak
    First published:

    Tags: Hollywood

    அடுத்த செய்தி