முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காந்தாரா தேசத்தை பி.யூ.சின்னப்பா மீட்ட அர்த்தனாரி கதை

காந்தாரா தேசத்தை பி.யூ.சின்னப்பா மீட்ட அர்த்தனாரி கதை

பி.யூ.சின்னப்பா

பி.யூ.சின்னப்பா

புதுக்கோட்டை உலகநாத பிள்ளை சின்னசாமி என்கிற பி.யூ.சின்னப்பா நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவனும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் அர்த்தனாரி என்றும் அழைக்கப்படுகிறார். இந்தப் பெயரில் 1946 இல் ஒரு திரைப்படம் வெளியானது. பி.யூ.சின்னப்பா பிரதான வேடத்தில் நடித்தார். அந்தக் காலத்தில் புராண, இதிகாசக் கதைகள்தான் பெரும்பாலும் திரைப்படமாகின. இவற்றைவிட்டால் நாட்டார் கதைகள். இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் புராண கதைகளின் எச்சமாக இருக்கும். அப்படியொரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் அர்த்தனாரி திரைப்படம்.

காந்தாரா என்ற தேசத்தின் ராணிகள் பகவதியும், புண்ணியவதியும். இதில் பகவதியின் கணவர் விஜயவர்மன். எதிரிகளின் சூழ்ச்சியால் விஜயவர்மன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவான். ராணிகள் இருவரும் கங்கை நதியோரம் வசித்து வருவார்கள். சிறையில் இருக்கும் விஜயவர்மன் எப்படியாவது சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் நாட்டை கைப்பற்ற திட்டம் போடுகையில், ராணிகள் இருவரும் கங்கையில் குதித்து, உயிரை மாய்த்துக் கொள்வதென முடிவெடுப்பர்.

ராணிகள் பகவதியும், புண்ணியவதியும் கங்கையில் குதிப்பதை முனிவர் ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் அவர்களை காப்பாற்றுவதுடன், அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் அனைத்தும் சரியாகும் என வழிகாட்டுவார். ராணிகளும் அதன்படியே நடக்க, சிறையில் இருக்கும் விஜயவர்மன் நண்பனின் உதவியால் தப்பித்து, தனது நாட்டை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வான்.

இதில் விஜயவர்மனாக பி.யூ.சின்னப்பாவும், அவரது மனைவி பகவதியாக எம்.எஸ்.சரோஜாவும், புண்ணியவதியாக எம்.வி.ராஜம்மாவும் நடித்தனர். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரும் நடித்தனர். சிறுகதை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி.எஸ்.ராமைய்யா இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதினார். டி.ஆர்.ரகுநாத் படத்தை தயாரித்து, இயக்கினார்.

படத்துக்கு தனி ஒரு நபர் இசையமைக்கவில்லை. மெட்ராஸ் யூனிட்டி ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் மியூசிக் பார்ட்டி இதன் இசையை கவனிக்க, பாபநாசம் சிவனும், ராஜகோபால் ஐயரும் பாடல்கள் எழுதினர். இந்த ராஜகோபால் ஐயர் வேறு யாருமில்லை, பாபநாசம் சிவனின் சகோதரர், மறைந்த முன்னாள் நடிகையும், முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான வி.என்.ஜானகியின் தந்தை.

புதுக்கோட்டை உலகநாத பிள்ளை சின்னசாமி என்கிற பி.யூ.சின்னப்பா நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அவர் நடித்த சவுக்கடி சந்திரகாந்தா நாடகம் 1936 இல் திரைப்படமானபோது அதில் நடித்தார். தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், அவர் நடித்தப் படங்கள் எதுவும் பெரிதாகப் போகவில்லை. அந்தநேரத்தில் ஆர்.சுந்தரம் அவரை தனது உத்தம புத்திரன் படத்தில் இரு வேடங்களில் நடிக்க வைத்தார். தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட உத்தம புத்திரன் பி.யூ.சின்னப்பாவின் முதல் வெற்றிப் படமானது. அதன் பின் தொடர்ச்சியாக வெற்றிகள் தந்தார். இந்த உத்தம புத்திரனின் ரீமேக்தான் சிவாஜி நடிப்பில் 1958 இல் வெளியான உத்தம புத்திரன்.

பி.யூ.சின்னப்பாவின் பெயர் உச்சத்தில் இருந்தபோதுதான் அர்த்தனாரி வெளியானது. எனினும் காந்தாரா தேசத்தை பி.யூ.சின்னப்பா மீட்ட கதை இந்நாள் காந்தாரா படத்தைப் போல் பம்பர்ஹிட் ஆகவில்லை, சுமாராகவே போனது. 1946, பிப்ரவரி 7 இதே நாளில் அர்த்தனாரி வெளியானது. இன்றுடன் படம் வெளியாகி 77 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema