சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு தமிழக திரைப்பிரபலங்கள் ஏஆர் ரஹ்மான், நயன்தாரா, மாதவன், தமன்னா உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவின் 75-வது திரைப்பட விழா மே 17-ம் தேதி கேன்ஸில் (பிரான்ஸ்) தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும், இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இந்திய திரைத்துறையின் 12 பிரபல நட்சத்திரங்கள் அடங்கிய குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்க உள்ளது. அக்குழுவில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், கிராமப்புற இசையமைப்பாளர் & பாடகர் மாமே கான், நடிகர் மாதவன், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா பாட்டியா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் Gala-வில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட உள்ளது.
மேலும், நடிகர் மாதவன் நடிப்பில், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெளியாக உள்ள "ராக்கெட்ரி" திரைப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஜூரியாக இடம்பெற்றுள்ளார்.
Also read... Gold Rate: குட் நியூஸ்! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?
இந்திய அளவிலான திரைப் பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பது வழக்கமான ஒன்று என்றாலும், ஏ ஆர் ரஹ்மான், மாதவன், நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே என அதிக அளவில் தென்னிந்திய பிரபலங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்பது இதுவே முதல்முறை. மேலும், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இந்தாண்டு நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழா இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.