மகள், மருமகன் மற்றும் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இசைப்
புயல் ஏ.ஆர். ரகுமான் வாழ்த்துப் பெற்றார்.
ஏ.ஆர். ரகுமானின் மூத்த மகள் கதிஜாவுக்கும், ரியாசுதீன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சினிமா மற்றும் இசை ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் 1995-ல் சாய்ரா பானுவை திருமணம் முடித்தார். இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் மூத்த மகள் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க - எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல்
மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது, ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றியவர்.
ஏ.ஆர். ரகுமான் தனது சமூக வலைதள பக்கங்களில், 'எல்லாம் வல்ல இறைவன் மணமக்களை ஆசிர்வதிக்கட்டும். உங்கள் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் நன்றியை முன்னரே தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மகள் கதிஜா, மருமகன் ரியாசுதீன் மற்றும் குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏ.ஆர்.ரகுமான் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பின்போது, ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.