முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்ச்சையான காளி கோயில் காட்சி.. முகத்திரை கிழிக்கப்பட்ட போலி சாமியார்.. திரைப்படத்தில் தீப்பொறி பறக்க வைத்த அண்ணா!

சர்ச்சையான காளி கோயில் காட்சி.. முகத்திரை கிழிக்கப்பட்ட போலி சாமியார்.. திரைப்படத்தில் தீப்பொறி பறக்க வைத்த அண்ணா!

வேலைக்காரி

வேலைக்காரி

காளி கோயிலில் ஆனந்தன் பொருள்களை வீசியெறியும் காட்சியை முன் வைத்து, படத்தை தடை செய்ய வேண்டும் என ஒரு கோஷ்டி ஆர்ப்பரித்தது. மக்கள் அதனை உதாசீனப்படுத்தி வேலைக்காரியை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கினர்.

  • News18
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புராணக் கதைகளில் தமிழ் சினிமா மூழ்க்கிக் கிடந்த நேரம் புதுவெள்ளமாக வந்தது அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம். அண்ணா இதே பெயரில் எழுதிய நாடகத்தை தழுவி திரைப்படம் எடுக்கப்பட்டது.

வித்தியாசமான கதைகளை படமாக்குவதில் ஆர்வம் கொண்ட ஜுபிடர் பிக்சர்ஸ் எம்.சோமசுந்தரம் 1948 இல் வேலைக்காரியை திரைப்படமாக்க தீர்மானித்தார். அப்போது ஜுபிடர் பிக்சர்ஸ் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸில் இயங்கி வந்தது. அங்குதான் வேலைக்காரி திரைப்படம் உருவானது. ஜுபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான கதாசிரியரும், இயக்குனரான ஏஎஸ்ஏ சாமி படத்தை இயக்கினார்.

பண்ணையார்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களையும், அவர்கள் கஷ்டங்களையும், அவர்கள் நம்பும் கடவுள்களால் அவர்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை என்பதையும், போலிச் சாமியார்களையும் விரிவாக காட்சிப்படுத்திய முதல் வரிசைத் திரைப்படங்களில் வேலைக்காரியும் ஒன்று. அன்றைய காலகட்டத்தையும், அப்போது வெளிவந்தத் திரைப்படங்களையும் ஒப்பு நோக்க, வேலைக்காரியை காலத்துக்கு முந்தைய திரைப்படம் எனலாம். பண்ணையார் வேதாசலம் முதலியாருக்கு மூர்த்தி, சரசா என்று இரண்டு வாரிசுகள். சரசா வேலைக்காரர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறவள். மூர்த்தி மென்மையானவன், அடுத்தவர் துன்பத்தை புரிந்து கொள்கிறவன். அவனுக்கு அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் அமிர்தத்தின் மீது காதல். வேதாசலம் முதலியாரிடம் சுதர்சனம் பிள்ளை கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்த முடியாமல், பண்ணையாரின் கெடுபிடி தாங்காமல் தற்கொலை செய்து கொள்வார். இதனை அவரது மகன் ஆனந்தன் பார்ப்பான். வேதாசலம் முதலியாரை பழி வாங்க கத்தியை தீட்டுவான்.

சமகால அரசியல் தெளிவுள்ள மணி அவனைத் தடுத்து, கத்தியைத் தீட்டாதே புத்தியை தீட்டு என அறிவுரை வழங்குவான். காளி பக்தனான ஆனந்தன், காளி தனக்கு உதவி செய்யவில்லை என்று செய்யும் அலம்பல் பிரச்சனையை உருவாக்க, மணி அவனுக்கு அடைக்கலம் தருவான். அப்போது, ஆனந்தன் போலவே இருக்கும் ஒரு சடலத்தை இருவரும் கண்டுபிடிப்பார்கள். அது, பணக்கார பெண்மணியின் ஒரே மகன் பரமானந்தம் என்பது தெரிய வரும். ஆனந்தன் பரமானந்தம் என்று சொல்லி, வேதாசலம் முதலியாரின் மகள் சரசாவை திருமணம் செய்து, ஊதாரியாக அவரது சொத்துக்களை அழித்து, சரசாவையும் துன்புறுத்துவான். வேதாசலம் முதலியாரின் சொத்துக்களுடன் அவரது பெயரும் கரையத் தொடங்கும்.

மூர்த்தி அமிர்தத்தை காதலிப்பதை அறிந்து கொண்ட ஆனந்தன், மூர்த்திக்கும், வேதாசலம் முதலியாருக்கும் இடையில் பகையை மூட்டிவிடுவான். வீட்டைவிட்டு வெளியேறும் மூர்த்தி, அமிர்தத்தை சந்தித்து, சென்னை சென்று நண்பர்களின் உதவியை பெறப் போவதாகவும், திரும்பி வந்து அமிர்தத்தை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுவான். அமிர்தத்தின் தந்தை முருகேசன் வேதாசலம் முதலியாரின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரர். அவர் முதலாளியை மேலும் நெருக்கடிக்குள் தள்ள விரும்பாமல் வயதான ஒருவருக்கு தனது மகள் அமிர்தத்தை திருமணம் செய்து வைக்க திட்டமிடுவார். இதையறிந்து அமிர்தம் வீட்டைவிட்டு வெளியேறுவாள்.

மகள் இறந்ததால் மனநிலை தவறிய பாலு முதலியார் என்ற பணக்காரர் அமிர்தத்தை தனது மகள் என்று கருதுவார். அவருக்கு சரியான மருத்துவம் தந்து அமிர்தம் அவiரை சுயநினைவுக்கு கொண்டு வருவாள். அவளை தனது மகள் போலவே பாலு முதலியார் தன்னுடன் வைத்துக் கொள்வார்.

நண்பர்களிடம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வரும் மூர்த்திக்கு, அமிர்தம் இறந்துவிட்டதாக தவறாக தகவல் கிடைக்க, மனம் வெறுத்து ஒரு சாமியாரிடம் சென்று சேருவான். அவன் ஒரு போலி சாமியார். அவனுக்கும் மூர்த்திக்கும் நடக்கும் சண்டையில் சாமியார் எதிர்பாராதவிதமாக மரணமடைய, கொலைப்பழி மூர்த்தி மீது விழும்.

மணியின் துணையுடன் ஆனந்தன் நீதிமன்றத்தில் வாதாடி மூர்த்தியை வெளியே கொண்டு வருவான். அவனை பாலு முதலியாரின் மகளை மணந்து கொள்ளச் சொல்வான். பாலு முதலியாரின் மகளாக வேறு பெயரில் இருக்கும் அமிர்தத்தை கண்டு, தனது காதலி போல் இருப்பதாக நினைத்து அவளை மணந்து கொள்வான். திருமணத்துக்குப் பிறகு வேதாசலம் முதலியாரிடம், அவரது மகளை மணந்த தான் அவரிடம் கடன் வாங்கி உயிரைவிட்ட சுதர்சனம் பிள்ளையின் மகன் ஆனந்தன் என்பதையும், அவரது மகன் மூர்த்தி மணந்தது அவரது வேலைக்காரர் முருகேசனின் மகள் அமிர்தம் என்பதையும் வெளிப்படுத்துவான். சாதித்திமிரும், பணத்திமிரும் ஒழிந்தது, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று படம் முடியும்.

வார்க்க பேதத்தையும், சாதித் திமிரையும் வேலைக்காரி கடுமையாக விமர்சித்தது. அதுவரை பக்திப் படங்களோ கோலோச்சிய தமிழ் சினிமாவில் அண்ணாவின் படமும், வசனங்களும் புதிய அத்தியாயத்தை எழுதின. காளி கோயிலில் ஆனந்தன் பொருள்களை வீசியெறியும் காட்சியை முன் வைத்து, படத்தை தடை செய்ய வேண்டும் என ஒரு கோஷ்டி ஆர்ப்பரித்தது. மக்கள் அதனை உதாசீனப்படுத்தி வேலைக்காரியை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கினர்.

படத்தில் வேதாசலம் முதலியாராக டி.பாலசுப்பிரமணியமும், மூர்த்தியாக எம்.என்.நம்பியாரும், சரசாவாக வி.என்.ஜானகியும், மணியாக பாலையாவும், அமிர்தமாக எம்.வி.ராஜம்மாவும் நடித்தனர். போலி சாமியார் வேடத்திலும் நம்பியாரே நடித்தார். நாயகன் ஆனந்தன் வேடத்தில், வேலைக்காரி நாடகத்தை நடத்தி வந்த கே.ஆர்.ராமசாமி நடித்தார். சமூகத்தை மாற்றியமைக்கும் திரைப்படம் என புகழப்பட்ட வேலைக்காரி, 1949, பிப்ரவரி 25 இதே நாளில் வெளியானது. இன்று வேலைக்காரி திரைப்படம் தனது 74 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anna, Classic Tamil Cinema