நடிகை அஞ்சலி தேவி, டி.ஆர்.ராஜகுமாரி வரிசையில் வரும் சகலகலாவல்லி. ஐம்பதுகளில் அவரது தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியானார். அவரது கணவர் ஆதிநாராயணராவ் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். அவர்களின் அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.
1953-ல் அஞ்சலி தேவி நடித்த தெலுங்குப் படம், பக்கா இன்டி அம்மாயி திரைப்படம் பம்பர் ஹிட்டானது. அதனை 1959-ல் தமிழில் ரீமேக் செய்தனர். இந்தத் தெலுங்குப் படமும்கூட வங்க மொழிப் படமான பாஷர் ரீமேக்தான். இதே பெயரில் எழுத்தாளர் அருண் சௌத்ரி எழுதிய சிறுகதையை தழுவி இந்த வங்க சினிமா எடுக்கப்பட்டது. இப்படி சிறுகதையிலிருந்து வங்கத்தில் படமாகி, தெலுங்கில் தழுவப்பட்டு இறுதியில் தமிழுக்கு வந்தது. படத்துக்கு அடுத்த வீட்டுப் பெண் என்று பெயர் வைத்தனர்.
இதன் வசனத்தை எழுதும் பொறுப்பு அப்போதைய ஸ்டார் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் எதிர்பார்த்ததைவிட அதிக நாள்கள் எடுத்துக் கொள்ள, அஞ்சலி தேவி, 'ரொம்ப யோசிச்சு எழுத வேண்டாம், தெலுங்கு வசனத்தை அப்படியே தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்தால் போதும்' என்று தனது உதவியாளரிடம் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்ட ஸ்ரீதரின் படைப்பாளி உள்ளம் சினம் கொள்ள, அதுவரை எழுதிய ஸ்கிரிப்டையும், வாங்கிய முன்பணம் ஆயிரத்தையும் திருப்பி அனுப்பினார்.
ஏற்கனவே இரு மொழிகளில் வெற்றி பெற்ற படம் என்பதால் அஞ்சலி தேவி அசரவில்லை, வசனம் எழுதும் பொறுப்பை தஞ்சை ராமையாதாஸிடம் ஒப்படைத்தார். குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. 1960 பிப்ரவரி 11 அடுத்த வீட்டுப் பெண் அஞ்சலி தேவி நடிப்பில், வேதாந்தம் ராகவய்யா இயக்கத்தில், அஞ்சலி தேவியின் கணவர் ஆதிநாராயணராவ் இசையில் வெளியானது.
அதுவரை அஞ்சலி தேவி தமிழில் காமெடி ரோலில் நடித்ததில்லை. காதல் ரசம் சொட்டும் வேடம், இல்லையெனில் சென்டிமெண்டில் பிழியவிடும் கதாபாத்திரம். அடுத்த வீட்டுப் பெண் முற்றிலும் சிரிக்க வைக்கிற படம். ரசிகர்கள் ஆரவாரமாக படத்தைப் பார்த்ததில் படம் இங்கேயும் பம்பர் ஹிட்டானது.
மன்னாரு என்ற வெகுளி தனது அடுத்த வீட்டுப் பெண் லீலாவை கரெக்ட் செய்ய, நன்றாகப் பாடத் தெரிந்த நண்பனை பாடவிட்டு, இவன் உதட்டசைத்து, காதல் செய்வதுதான் கதை. மன்னாருவாக டி.ஆர்.ராமச்சந்திரன் பட்டையை கிளப்பியிருந்தார். இந்தப் படத்தின் கதையை வெட்டி ஒட்டித்தான் உத்தரவின்றி உள்ளே வா, இன்று போய் நாளை வா, உள்ளத்தை அள்ளித்தா உள்பட பல படங்கள் எடுக்கப்பட்டன. கனிகள் வேறாக இருக்கலாம், ஆனால் அதற்கான விதை, அடுத்த வீட்டுப் பெண்.
1960, பிப்ரவரி 11 வெளியான அடுத்த வீட்டுப் பெண், 63 வருட நிறைவை கொண்டாடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema