நடிகையும்,பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா இரு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை மேற்கொண்டார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா, தனது அனுபவங்களின் அடிப்படையில், எதையெல்லாம் கடைப்பிடித்தால், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என பத்து ஆலோசனைகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
1. கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தாலும் நீங்கள் பாசிட்டிவாக இருங்கள். பயம் தரும் எதிர்மறையான சிந்தனைகள் எல்லாவற்றையும் மோசமானதாக்கிவிடும். அதனால் நோயில் இருந்து மீண்டு வருவது எப்படி என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
2. கொரோனா வைரஸ் மூக்கு, தொண்டை, இறுதியாக நுரையீரல் என சுவாசப்பாதையைத்தான் தாக்குகிறது. அதனால் இந்த சுவாசப்பாதையை தொற்றில் இருந்து காக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். புதினா, கற்பூர எண்ணெய் ஆகியவற்றைப்போட்டு ஆவி பிடிப்பது சுவாசப்பாதையை சுத்தமாக வைத்திருக்க உதவும். அதேபோல் சாதாரண சுவாசப் பயிற்சிகளும் உதவிகரமாக இருக்கும்.
3. நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். நம் உணவு முறையிலேயே பல நல்ல உணவுகள் இருக்கின்றன. அதையெல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள். மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் கலந்த பால், சூப் ஆகியவற்றை அருந்தலாம். சளி பிடிக்க கூடிய உணவுகளை மொத்தமாகத் தவிர்த்து விடுங்கள். அடிக்கடி தண்ணீர், ஜூஸ் என நீர் சம்பந்தபட்ட உணவு வகைகளை எடுத்துக்கொண்டேயிருங்கள்.
View this post on Instagram
4. பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ நின்று தினமும் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். இரண்டுமே இல்லையென்றாலும் ஜன்னல்களைத் திறந்து வைத்து கொஞ்சம் வெளிக்காற்றை சுவாசிக்கலாம்.
5. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி,பி, சிங்க் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அஸ்வகந்தா, துளசி என மூலிகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் ஒரு துணை மருத்துவம்தான். அதனால், மருத்துவரைக் கலந்தாலோசித்து தேவையான மருந்துகளை இதனோடு சேர்த்து நிச்சயம் உட்கொள்ளவேண்டும்.
6. கொரோனா குறித்த எதிர்மறை செய்திகள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் இருந்து மொத்தமாக விலகியிருங்கள். மன அழுத்தம் உங்களின் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். புத்தகம் படியுங்கள், பாடல்கள் கேளுங்கள், உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு தொடர்ந்து பேசுங்கள்.
7. தனிமையில் இருக்கும்போது அதிகம் உணர்ச்சிவசப்படுவோம். அது போன்ற நேரங்களில் கவுன்சிலிங் அவசியம். ஏராளமான ஹெல்ப்லைன்கள் இருக்கின்றன. அவர்களின் உதவியை நாடலாம்.
8. நம் குடும்பத்தினரின் பாதுகாப்பு மட்டுமல்ல டிரைவர்கள், வீட்டுப் பணியாளர்கள், பாதுகாப்பு காவலர்கள் என நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது உங்களுக்கு மிக அருகில் இருந்து உதவியவர்களை நல்லபடியாக கவனித்துக்கொள்வதும் உங்கள் பொறுப்பு தான்.
9. தேவையற்ற காலதாமதம் செய்யாதீர்கள். நோயின் அறிகுறி தீவிரமானாலோ, ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். மருத்துவ உதவி உங்களுக்கு கிடைக்கும்வரை ஆக்ஸிஜன் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் Proning Position (குப்புறப்படுத்துக்கொள்வது) ஆகியவை உதவும்.
10. கொரோனா என்பது சர்வதேச பெருந்தொற்று நோய். உங்களுக்கு இந்த நோய்வருவது உங்கள் தவறல்ல. அதனால் உங்களுக்கு வருவதிலோ உங்கள் அருகில் உள்ளவர்களுக்கு வருவதிலோ குற்ற விசாரணைகள் தேவையில்லை. உங்கள் மீதும், உங்களைச் சார்ந்தவர்கள் மீதும் கருணையோடு இருங்கள். நாம் எல்லோரும் இணைந்து போராடுவோம் என்று கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andrea Jeremiah