Amazon MGM Deal: 61,434 கோடிக்கு ஹாலிவுட் எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்கிய அமேசான்

அமேசான் - எம்ஜிஎம்

எம்ஜிஎம் நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது. ஃபார்கோ, வைக்கிங், ஷார்க் டேங்க் போன்றவை அதில் முக்கியமானவை.

 • Share this:
  ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்மை 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமேசான் வாங்கியுள்ளது. இது நமது ரூபாயில் சுமார் 61,434 கோடிகளாகும். உலக அளவில் திரைப்பட துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய வர்த்தகமாக இது பார்க்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நெட்பிளிக்ஸுக்கு கடும் சவாலை அமேசான் பிரைம் வீடியோ இதன் மூலம் ஏற்படுத்தியுள்ளது.

  எம்ஜிஎம் (Metro Goldwyn Mayer) ஃபிலிம்ஸ் 1924-ல் தொடங்கப்பட்டது. முதல் வருடம் இந்நிறுவனம் தயாரித்த, விநியோகித்த படங்களின் எண்ணிக்கை சுமார் 29. அன்றிலிருந்து இன்று வரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜிஎம் விளங்கி வருகிறது. சுமார் நான்காயிரம் திரைப்படங்கள் இந்நிறுவனத்தின் உடமையாக உள்ளன. இதில் உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பல திரைப்படங்களும் அடக்கம். முக்கியமாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள்.

  1953-ல் இயான் ஃப்ளெம்மிங் ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனை உளவாளி கதாபாத்திரத்தை உருவாக்கி, அதனடிப்படையில் பல கதைகள் எழுதினார். யுகேயின் MI6 உளவு நிறுவனத்தின் முக்கிய உளவாளி இந்த ஜேம்ஸ் பாண்ட். நாசக்கார சக்திகளை அழித்து, உலகை காப்பது இவரது கடமை. நிறவெறியும், இனவெறியும் மிகுந்த இயான் ஃபிளெம்மிங் அதற்கேற்ப ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தையும், கதையையும் எழுதினார் என்ற குற்றச்சாட்டு இப்போதும் நிலுவையில் உள்ளது. அவரது கதைகளில் பெரும்பாலான வில்லன்கள் ரஷ்யர்கள். ஆக்டபஸ் படத்தில் இந்தியர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டனர்.

  நிற்க. நமது விஷயத்துக்கு வருவோம். 1962-ல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையப்படுத்தி டாக்டர் நோ திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பால் தொடர்ச்சியாக ஜேம்ஸ் பாண்ட் கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இதுவரை 24 திரைப்படங்கள் வந்துள்ளன. 25-வது படமாக நோ டைம் டூ டை திரைப்படம் உருவாகியுள்ளது. டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் இத்திரைப்படம் 30 செப்டம்பர் யுகேயிலும், 8 அக்டோபர் யுஎஸ்ஸிலும் வெளியாகிறது.

  உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் படங்களின் மொத்த உரிமையும் எம்ஜிஎம் நிறுவனத்திடம் உள்ளது. இப்போது இது அமேசான் கைவசம் சென்றுள்ளது. அமேசானின் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இனி ஜேம்ஸ் பாண்ட் படங்களை ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம்.
  இதேபோல் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ராக்கி பட சீரிஸின் உரிமையும் எம்ஜிஎம் வசமே உள்ளது. தெல்மா அண்ட் லூயிஸ், க்ரீட், தி கேர்ள் வித் ட்ராகன் டாட்டூ, சமீபத்தில் வெளியான கேய் ரிச்சியின் ராத் ஆஃப் மேன் உள்பட நூற்றுக்கணக்கான முக்கிய படங்களின் உரிமை இந்த வர்த்தகத்தின் மூலம் அமேசானுக்கு கிடைத்துள்ளது. எம்ஜிஎம் நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது. ஃபார்கோ, வைக்கிங், ஷார்க் டேங்க் போன்றவை அதில் முக்கியமானவை.

  அமேசான் பிரைம் வீடியோவுக்கு போட்டியாக உள்ள நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டார், ஹெச்பிஓ மேக்ஸ் போன்றவை பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. அவற்றை ஈடுசெய்ய அமேசானுக்கும் இதுபோன்ற பிரமாண்ட முதலீடுகள் அவசியமாகிறது. திரைத்துறையில் மட்டுமின்றி விளையாட்டிலும் அமேசான் கவனம் செலுத்துகிறது. நேஷனல் ஃபுட்பால் லீகை ஒளிபரப்பும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது. நீண்டகால நோக்கில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி அமேசான் ஒரு வருடத்துக்கு செலவு செய்யும் தொகை சுமார் ஒரு பில்லின் என கணக்கிடப்பட்டுள்ளது.

  ஓடிடி தளங்கள் உலகில் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதன் ஒரு துளி இது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: