அஜித் தனது அடுத்தப் படத்துக்காக உடல் எடையை குறைக்கிறார். 20 கிலோவரை உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் திரையுலகை சுற்றி வருகிறது. நடிகர்களுக்கு உடல் தோற்றம் முக்கியமானது. இதன் பொருள் சிக்ஸ்பேக்குடன் இருக்க வேண்டும் என்பதல்ல.
மலையாளத்தில் கொட வயிறு எனப்படும் செல்ல தொப்பை நடிகர்களுக்கு இருப்பது (முன்பு) ஒரு கௌரவம். ஆனால், இன்று அங்கேயும் நிலைமை மாறிவிட்டது.நடிகர் ஒருவர் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது திரையுலகிலும், அவரது ரசிகர்களிடையேயும் பாஸிடிவ் வைப்ரேஷனை தரக்கூடியது. சிம்பு சமீபத்திய உதாரணம். தனது உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் நடிக்க அவருக்கு கிடைத்த வரவேற்பை நேரிலேயே பார்த்தோம். அஜித்தும் தனது அடுத்தப் படத்துக்காக உடல்
எடையை குறைக்கப் போவதாக வரும் செய்திகள் ஆரோக்கியமானது.
இதற்கு முன்பும் அஜித் உடல் எடையை குறைத்துள்ளார். அது எந்தப் படத்திற்கு என்று அறிந்தால் பலருக்கும் ஆச்சரியம் எழும். பாலாவின் நான் கடவுள் படத்துக்காகதான் அஜித் முதல்முறை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மானார்.அஜித் 2004 இல் ஜி படத்தை முடித்தார். படம் தாமதமாக 2005 இல் வெளியானது. 2004 இல் நான் கடவுள் படத்துக்காக பாலா அஜித்தை அணுகினார். உடல் எடையை படத்தின் கதாபாத்திரத்துக்காக குறைக்க வேண்டும், நீளமாக தலைமுடி வளர்க்க வேண்டும் என்ற பாலாவின் வேண்டுகோளை ஏற்று அஜித் உடல் எடையை குறைத்தார். தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டார். இதற்கு பல மாதங்கள் பிடித்தது. நான் கடவுளுக்காக வேறு படங்கள் எதிலும் அஜித் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
2005 இல் பாலா தனது முடிவை மாற்றிக் கொண்டார். அஜித்துக்குப் பதில் வேறு நடிகரை வைத்து நான் கடவுளை எடுக்க திட்டமிட்டார். பல மாதங்களை அஜித் நான் கடவுளுக்காக செலவளித்திருந்தார். இதனால் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை அவர் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.இந்த பிரச்சனை பெரிதானது.
இதையும் படிங்க.. பழமையான கஜுராஹோ கோவில்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
அஜித்தை தனியார் விடுதியில் வைத்து பாலாவும், பிரபல பைனான்சியரும் மிரட்டியதாகவும், அவரை தாக்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு, தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி ஒன்றில் விளக்கமளித்தார். பொதுவாக பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள விரும்பாத அஜித் அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்தார்
. சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட போது அஜித் - பாலா பிரச்சனை மீண்டும் மேலெழுந்தது. இதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் சுசீந்திரன்.
அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புசெழியனே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தவர், "அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடவுள் நேரத்தில் இந்த அன்புசெழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க.. ஷாருக்கானுடன் லடாய் – அட்லியின் பதிவால் சர்ச்சை!
நான் கடவுளுக்காக குறைக்கப்பட்ட உடல் எடை மற்றும் நீண்டமுடியுடன் பி.வாசு இயக்கத்தில் பரமசிவன் படத்தில் அஜித் நடித்தார். பிறகு பேரரசு இயக்கத்தில் திருப்பதியிலும் அதே தோற்றத்தில் நடித்தார். வரலாறு படத்தில் அவரது உடல் எடை சற்று கூடியது. 2007 இல் அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படத்துக்கும் பாலா அவரை நான் கடவுளிலிருந்து நீக்கிய நிகழ்வுக்கும் தொடர்புண்டு. ஆழ்வாரில் அக்ரஹார அம்பியாக வருவார் அஜித். அப்பாவி. தனது குடும்பத்தை வில்லன்கள் நிர்மூலமாக்க, தவறை தட்டிக் கேட்கிற யாரும் கடவுள்தான் என்ற கதாகாலேட்சப உரையை கேட்டு, கடவுள் போல் வேடமிட்டு வந்து எதிரிகளை கொலை செய்வார். கடவுள் வேடத்தில் அஜித் வில்லன்கள் முன் தோன்றுகையில் அவர்கள், யார் நீ என்று கேட்க, அஜித், நான் கடவுள் என்பார். நான் கடவுள் என்று அவர் சொல்வது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளில் வரும். பாலாவால் நான் கடவுள் படத்தில் ஏமாற்றப்பட்டதை அழ்வார் படத்தில் நான் கடவுள் என வசனம் பேசி அஜித் தீர்த்துக் கொண்டார். ஆனால், அழ்வார் ஓடவில்லை, தோல்வியடைந்தது.
உடல் எடை குறைப்பது ஒரு நடிகரின் வாழ்வில் ஓர் நிகழ்வு மட்டுமே. ஆனால், அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அதுவொரு பகுதி, நீண்ட வரலாறு.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.