முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தங்களது படத்தின் மொத்த பட்ஜெட்டில் 90 சதவீதத்தை சம்பளமாக வாங்குவதால், தமிழ் சினிமாவின் தரம் குறைவதாக, நடிகர் அருண்பாண்டியன் விமர்சித்துள்ளார். தமிழை விட, தெலுங்கு சினிமா ஒரு படி மேலே சென்றுவிட்டதாக பாரதிராஜா வியந்து பாராட்டியுள்ளார்.
நடிகர் கருணாஸ் நடித்துள்ள 'ஆதார்' திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
விழாவில் தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை குறித்து பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் மொத்த பட்ஜெட்டில் நடிகர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததாகவும், இது தற்போது மாறியதால் தமிழ் சினிமா பின்னோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.
அருண்பாண்டியன் கருத்துக்கு அதே மேடையில் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்க முன்வருவதால் தான், நடிகர்கள் வாங்குவதாக கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு பிரம்மாண்டம்.. பூர்வீக கிராமத்தில் புது வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!
பின்னர் பேசிய இயக்குநர் பாரதிராஜா, நடிகர்களின் சம்பளத்தை விட, படத்துக்கு அதிகம் செலவு செய்தால் தான், சிறந்த படைப்பு உருவாகும் என்றார். மேலும், ராஜமெளலியின் படத்தை வியந்து பார்ப்பதாக கூறிய பாரதிராஜா, தெலுங்கு படங்களில் உள்ள பிரமாண்டம், பாடல்கள் மிரள வைப்பதாகவும் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக டப்பிங் செய்து வெளியிடப்படும் மாற்று மொழி படங்கள், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதை, புஷ்பா, RRR, KGF-2 படங்கள் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற 'ஆதார்' பட நிகழ்ச்சியில் தமிழ் படத்தின் அடையாளம், தற்போதைய நிலை குறித்து இயக்குநர்கள் பேசியது விவாதப் பொருளாகியுள்ளது,
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.