Valimai: சூடு பிடிக்கும் அஜித்தின் வலிமை வர்த்தகம்!

அஜித்

அமேசான் நிறுவனம் படத்தின் வலைதள வெளியீட்டு உரிமையான OTTஐ தன்வசப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

  • Share this:
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரும் நிலையில் படத்தின் வர்த்தகமும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் ஒரு முறை கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை. ஸ்ரீதேவியின் மறைவின்போது அவரது கணவரான போனி கபூர் தயாரிப்பில், 2 திரைப்படம் நடித்துக் கொடுக்க சம்மதித்த அஜித் முதல் திரைப்படமாக நேர்கொண்ட பார்வையும், இரண்டாவதாக வலிமை திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தீரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்திற்காக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கி கதை சொன்ன இயக்குனர் வினோத்தை பெண்கள் பாலியல் சுதந்திரத்தை மையமாக வைத்து ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டையும், பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும் வர்த்தக ரீதியில் 5 கோடியில் இருந்து 6 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் வினோத் கூட்டணியில் மீண்டும் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தத் திரைப்படம் வர்த்தகத்தில் புதிய சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசுவாசம் திரைப்படம் தமிழக அளவில் ஈட்டிய வர்த்தகத்தை இலக்காக வைத்து வலிமை திரைப்படத்தை விற்பனை செய்ய முயற்சிகள் துவங்கின. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் இழப்பை ஈடுகட்ட, வலிமை திரைப்படத்தின் தமிழக வர்த்தகத்தின் போது இடையூறு செய்யக் கூடும் என்பதால் கோபுரம் பிலிம்ஸ் அன்புவிடம் படத்தின் தமிழகப் வர்த்தக உரிமையின் பொறுப்பை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை அன்பு வர்த்தகத்தை கையாண்டால் வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப மாட்டார்கள் என்பதால் போனி கபூர் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதேபோல வலிமை திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் OTT வர்த்தகமும் தற்பொழுது வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. போனி கபூருடன் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல வணிகத்திலும் மிக நெருங்கிய நட்பு பாராட்டி வரும் zee நிறுவனம் வலிமை திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் OTT உரிமையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேவேளையில் அமேசான் நிறுவனம் படத்தின் வலைதள வெளியீட்டு உரிமையான OTT-ஐ தன்வசப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் ஒட்டுமொத்த வணிகமும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் அஜித்தின் முந்தைய திரைப்படமான விஸ்வாசம் திரைப்படம் வர்த்தக ரீதியில் மாபெரும் வெற்றி பெற்றாலும் அதனைத் தொடர்ந்து வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வர்த்தக ரீதியில் சரிவை கண்டதாலும், வலிமை திரைப்படத்தின் வர்த்தகத்தை விஸ்வாசம் திரைப்படத்தை மையமாகக்கொண்டு நடத்த முயற்சிக்கும் தயாரிப்பு தரப்புக்கும், நேர்கொண்ட பார்வை விலையின் அடிப்படையில் படத்தை வாங்க முயற்சிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே வர்த்தக முரண்பாடு ஏற்பட்டு வருவதாகவும் விரைவில் இது சரி செய்யப்படும் எனவும் தெரியவந்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: