முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திரையரங்க கட்டுப்பாடுகள் அதிகரித்தாலும் ரிலீஸில் பின் வாங்காத வலிமை!

திரையரங்க கட்டுப்பாடுகள் அதிகரித்தாலும் ரிலீஸில் பின் வாங்காத வலிமை!

அஜித்

அஜித்

வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ள நிலையில் இந்த ஆதரவை அப்படியே அறுவடை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • Last Updated :

திரையரங்க கட்டுப்பாடுகளால் ராஜமௌலியின் பிரமாண்ட படங்கள் பின்வாங்கி உள்ளபோதும் அஜித்தின் வலிமை போட்டியில் நிலைத்திருக்கிறது.

எதிர்வரும் பொங்கல் விடுமுறை தினங்களை குறிவைத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் மாபெரும் பட்ஜெட் திரைப்படங்களான RRR, வலிமை, ராதே ஷ்யாம் உள்ளிட்டவை களமிறங்கி வசூல் வேட்டையாட திட்டமிட்டன. ஆனால் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக திரையரங்குகள் பெரும்பாலான மாநிலங்களில் மூடப்பட்டதாலும், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தாங்கள் குறித்த நாளில் களம் இறங்க முடியாமல் தயங்கி வருகின்றன.

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள RRR திரைப்படம் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி உள்ளதால் இந்தத் திரைப்படத்தை 800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த வசூலை ஈட்ட முடியும் என்பதால் எதிர்வரும் 7-ஆம் தேதி ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை வெளியிட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது.

படம் ஏழாம் தேதி வெளியாகும் என்ற நம்பிக்கையில் நாடு முழுவதும் படக்குழுவினர் பறந்து பறந்து பேட்டி கொடுத்த உழைப்பெல்லாம் வீணாய் போன வருத்தத்தில் தற்போது RRR படக்குழு சோர்ந்துள்ளது. ஆனால் இந்தியா முழுக்க உள்ள கட்டுப்பாடுகள் குறித்து கவலை கொள்ள தேவை இல்லாத அஜித்தின் வலிமை படக்குழு 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடனே திரையரங்குகளில் குறித்த தேதியில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

தமிழக அரசு 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு அறிவித்த பின்னர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவித்த தேதியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் உள்ள படக்குழு, குறித்த நாளில் படம் வரும் என ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளது. அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ள நிலையில் இந்த ஆதரவை அப்படியே அறுவடை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதே போல தெலுங்கில் பிரபாஸ், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் 350 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. RRR திரைப்படம் பின்வாங்கிய நிலையில் ராதேஷ்யாம் திரைப்படமும் இதேபோல போட்டியில் இருந்து விலகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திட்டமிட்டபடி ஜனவரி 14-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனால் வலிமை படம் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் அடுத்த நாள் வெளியாக உள்ள நிலையில் திடீரென இந்த போட்டியில் நடிகர் விஷாலும் இணைந்துள்ளார். விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது RRR திரைப்படம் வெளியாகாத காரணத்தால் முன்கூட்டியே பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema