Home /News /entertainment /

வலிமை வசூல் - அடிச்சு சொன்னாலும் இதை மட்டும் நம்பாதீங்க!

வலிமை வசூல் - அடிச்சு சொன்னாலும் இதை மட்டும் நம்பாதீங்க!

வலிமை

வலிமை

வலிமை படத்திற்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகள் எப்படி தங்களுடைய உண்மையான கணக்கை சமர்ப்பிக்கும்? எப்படி உண்மையான வசூலை அறிந்துகொள்ள முடியும்?

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது நடக்கக் கூடியது தான் வலிமை படத்திற்கும் நடந்து கொண்டிருக்கிறது. படம் வெளியான நான்காவது நாளே 100 கோடி வசூலை கடந்து விட்டது என ஆளாளுக்கு அறிவிக்கிறார்கள்.

தயாரிப்பாளரும், படத்தை வாங்கி வெளியிட்டவர்களும்  இதுவரை வாய் திறக்கவில்லை. அப்படியானால் வலிமை 100 கோடி வசூலிக்கவில்லையா என்று கேட்கலாம். விஷயம் அதுவல்ல. தமிழ் படம்  ஒன்றின் வசூலை புள்ளி விவரங்களுடன் கொடுப்பது தான் நகைச்சுவை. இந்த நகைச்சுவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

வலிமை திரைப்படம் முதல் நாளில் 36.17 கோடிகள் வசூலித்ததாக பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள். இரண்டாவது நாளில் 24.62 கோடிகள் எனவும், மூன்றாவது நாளில் 20.46 கோடிகள் எனவும், நான்காவது நாளில் 27.83 கோடிகள் எனவும், மொத்தமாக  109.08 கோடிகளை 4 நாளில் வசூலித்ததாக  கூறுகிறார்கள். அதே நேரம் வேறு சிலர் படத்தின் வசூல் முதல் நாளில் 15 முதல் 20 கோடிகள் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். முப்பத்தி ஆறு கோடி வசூல் என்று ஒருவர் சொல்லும்போது, அதற்கு ஒன்றிரண்டு கோடிகள் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால்  அதனை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பத்து பதினைந்து கோடிகள் வித்தியாசத்துடன் வேறொரு தகவல் எப்படி வெளியாகிறது?

அதற்கு முக்கிய காரணம், வசூல் எவ்வளவு என்பது துல்லியமாக தெரியாததே ஆகும். சென்னை உள்ளிட்ட ஒருசில மாநகரங்களில் உள்ள, ஒருசில மல்டிபிளக்ஸ் மட்டுமே முறையான டிக்கெட் கட்டணத்திற்கு டிக்கெட் விற்பனை செய்தன. தனி திரையரங்குகளில் 99% கட்டணத்தை உயர்த்தி விற்பனை செய்தன. அதாவது 150 ரூபாய் அரசு நிர்ணயித்த கட்டணம் என்றால் இவர்கள் 250, 300 ரூபாய் என வாங்கினார்கள். இப்படி தமிழகத்தில் வலிமை வெளியான திரையரங்குகளில் 99% டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியே வசூலித்தன.

எவ்வளவு உயர்த்தின, எவ்வளவு வசூல் என்பதற்கு எவ்வித கணக்கும் கிடையாது. அப்படி இருக்கையில் 36.17 கோடி ரூபாயை படம் முதல்நாளில்  வசூலித்தது என்று எதனடிப்படையில் கூறுகிறார்கள்? அரசு நிர்ணயித்த கட்டணத்தை வைத்து இந்த தொகையை நிர்ணயிக்கிறார்களா அல்லது ஒவ்வொரு திரையரங்கும் தங்கள் விருப்பப்படி உயர்த்திவிற்ற அந்த டிக்கெட் கட்டணத்தை வைத்து 36.17 கோடி வசூலித்ததாக கூறுகிறார்களா? இதற்கு எந்த பதிலும் ட்ரேட் அனலிஸ்டுகளிடம்  இல்லை.

ஒரு படம் நஷ்டம் அடையும் போது எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் நஷ்டம் ஆனது என துல்லியமாக சொல்லும் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஒரு படம் வெற்றி பெறும் போது இத்தனை லட்சங்கள், இத்தனை கோடிகள் லாபம் சம்பாதித்தது என்று இதுவரை கூறியதில்லை. லாபத்தில் அவர்கள் கணக்கு காண்பிப்பதில்லை. காட்டினால் அந்த தொகையை இன்கம்டாக்ஸில் காட்ட வேண்டும் என்பதால் அவர்கள் லாப கணக்கை ஒருபோதும் காட்டியதில்லை. இனிமேல் காட்டப் போவதுமில்லை.

வலிமை படத்திற்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகள் எப்படி தங்களுடைய உண்மையான கணக்கை சமர்ப்பிக்கும்? எப்படி உண்மையான வசூலை அறிந்துகொள்ள முடியும்? ரஜினி, விஜய், அஜீத், சூர்யா என ரசிகர்கள் பெருமளவு திரளும் திரைப்படங்களுக்கு இப்படித்தான் திரையரங்கு கட்டணத்தை உயர்த்தி வாங்குகின்றார்கள். இதன் காரணமாக அப்படங்களின் துல்லியமான வசூல் எவ்வளவு என்பதை ஒருவரால் கண்டுபிடிப்பது என்பது இயலாது. குத்துமதிப்பாக சொல்லப்படுகின்ற தொகையையே எல்லோரும் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் பொருள் வலிமை முதல் நான்கு தினங்களில் 100 கோடிகள் வசூலிக்கவில்லை என்பது அல்ல. ஒருவேளை அதன் வசூல் இவர்கள் குறிப்பிட்டதை விட அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் குறிப்பிட்டும் தொகை தான் உண்மையான வசூல் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் ஸ்ருதி ஹாசனை விடாத கொரோனா

டிக்கெட் விற்பனையில் நிலவும் இந்த  வெளிப்படைத்தன்மை இன்மையே தமிழ் சினிமா வர்த்தகம் சூதாட்டமாக மாறியதற்கு மிக முக்கிய காரணம். அரசு தலையிட்டு திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் திரையரங்குகள் வசூலிக்கின்றனவா என்பது உறுதி செய்ய வேண்டும். அரசு முத்திரை உள்ள டிக்கெட்டுகள் தான் விற்கப்பபடுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்து திரையரங்கு கவுண்டரில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கினால் மட்டுமே ஒரு திரைப்படம் எத்தனை கோடிகள் வசூலித்தது என்பது தெரியவரும்.

எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

அந்த கணக்கு தெரிந்தால் மட்டுமே பணம் போட்ட தயாரிப்பாளர் தனக்குரிய பங்கை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து பெற முடியும். இதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அதற்கு ஒத்துழைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் திரையரங்குகளுக்கும் உள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை செயல்பாட்டிற்கு வரும் வரை எந்தப் படத்தின் வசூலையும் உண்மையான வசூல் என்று சொல்வதற்கில்லை.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Ajith, Valimai

அடுத்த செய்தி