தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் அஜித். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான அஜித் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வாடகை காரில் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி அஜித் புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலாகின. தற்போது அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.
அதில், தனக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஏதோ சொல்ல உடனே எழுந்து நின்று தனது தொப்பியைக் கழட்டி வைத்து விட்டு தலையசைத்து கேட்கிறார் அஜித். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் தலைக்கனம் இல்லாத தன்னம்பிக்கையை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக பிரதமர் தொடங்கி முதல்வர், விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அஜித், “நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்”என்று கூறியிருந்ததையும் அஜித் ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.