எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ஏகே. 61 படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் எச். வினோத். ஏமாற்றுதல் எப்படி எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அந்த ஒரு படத்தைப் பார்த்தே நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
அந்த அளவுக்கு சதுரங்க வேட்டையின் அனைத்துக் காட்சிகளையும் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல், ஏகப்பட்ட தகவல்களுடன் எச்.வினோத் வடிவமைத்து இருப்பார்.
இதன்பின்னர் கார்த்தியுடன் அவர் உருவாக்கி தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. இந்த இரு படங்களையும் எச்.வினோத் செய்தித்தாள்களில் வரும் குற்றச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கியதாக நேர்காணலில் சொல்லியிருப்பார்.
இந்த படங்களைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை வினோத் இயக்கினார். இந்த படம் இந்தியில் உருவான பிங்க் என்ற படத்தின் ரீமேக்காகும். இதில் தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ப காட்சிகளை அமைத்து படத்தை வெற்றிப் படமாக உருவாக்கியிருப்பார் வினோத்.
இதன்பின்னர் அஜித்துடன் அடுத்த படமான வலிமையில் விறுப்பான சண்டை காட்சிகள், குற்ற காட்சிகளை அடுக்கி படத்தை சுவாரசியமாக வினோத் அளித்திருந்தார். இருப்பினும் வலிமை படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
இந்நிலையில் பெயரிடப்படாமல் உருவாகி வரும் அஜித்தின் 61வது படமான ஏகே 61 படத்தில் வினோத் இயக்குனராக உள்ளார். இந்தப் படம் வங்கி கொள்ளையின் அடிப்படையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் உண்மைச் சம்பவங்களின அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை பல்வேறு இடங்களில் நடந்த கொள்ளைச் சம்பவங்களின் அடிப்படையில் ரசிகர்களுக்கு சுவாரசியம் அளிக்கும் காட்சிகளை எச் வினோத் வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.
வலிமை கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஏகே 61 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்ற வினோத் கடுமையாக பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் இந்தாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.