Rajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்க போவது மட்டும் உறுதி.

  • Share this:
    அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கும் ரஜினிகாந்த் இன்னும், அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படமே அவருடைய இறுதிப் படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. பின்னர் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டு ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

    கபாலி, பேட்ட என அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்த படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்த நிலையில் மீண்டும் இளம் படைப்பாளியுடன் இணையவே அவர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜூக்கே, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ரஜினிகாந்த் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் தேசிங்கு துரைசாமியை அலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த், அப்போதே தனக்காக ஒரு கதையை தயார் செய்யும்படியும் அவரிடம் கேட்டிருந்தார். தற்போது இவர் சொன்ன ஒன்லைன் பிடித்துவிட, இவருடைய படத்திலும் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இருவரில் யார் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், அண்ணாத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்க போவது மட்டும் உறுதி, என திரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் தன் உடல் ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை கொண்டு படப்பிடிப்பை மிகவும் கவனமாக நடத்தி முடித்ததற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே தன்னுடைய அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ரஜினி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் ரஜினிகாந்த் சில தினங்கள் இங்கேயே ஓய்வெடுப்பதுடன், அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளையும் இங்குள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு உள்ளார். அதன்பின் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் அவர், மீண்டும் சென்னை திரும்பியதும் அடுத்த படத்துக்கான பணிகளை துவங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், அடுத்தடுத்து இன்னும் சில படங்களில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Shalini C
    First published: