பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் நடித்து வந்த ராம்சேது படக்குழுவினருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 45 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் அறிவித்திருந்த அக்ஷய்குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கொரோனா சோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் நடித்து வந்த ராம் சேது திரைப்படக் குழுவினர் சுமார் 100 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களை அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணியின் கள நிலவரம் ஆகியவை குறித்து, பல்வேறு துறை செயலர்கள் உட்பட மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில், பிரதமரின் முதன்மை செயலர், அமைச்சரவை செயலர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது பற்றியும் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.