140 கி.மீ வேகம்.. நண்பர்களுடன் ஆட்டம்... யாஷிகா ஆனந்த் கார் விபத்தின் பகீர் பின்னணி

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஓட்டி வந்த கார், டாடா ஹேரியர் வகையைச் சேர்ந்தது; இதன் கூரையில் ஒரு திறப்பு இருக்கும்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து, தமிழ் திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கார் விபத்திற்கு மதுபோதை காரணமில்லை என்றாலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

  இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் 21 வயதான நடிகை யாஷிகாஆனந்த். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

  ஆந்திரத் தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 28 வயதான வள்ளிசெட்டி பவானி. இவர் யாஷிகாவின் தோழி. அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தோழியைப் பார்ப்பதற்காக கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். நடிகை யாஷிகா, அவரது தோழி வள்ளி செட்டி பவானி, ஆண் நண்பர்கள் 31 வயதான சையது, 32 வயதான அமீர் ஆகியோர் சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து காரில் புதுச்சேரி சென்றுள்ளனர்.

  Also Read : ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகிறாரா ’சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி?

  பின்னர் அங்கிருந்து இரவு 10 மணியளவில் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். யாஷிகா கார் ஓட்ட, முன்பக்கத்தில் வள்ளிசெட்டி பவானியும் பின் இருக்கைகளில் ஆண் நண்பர்களும் இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த போது, மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில், திடீரென கார் நிலைதடுமாறி, சாலைத் தடுப்பில் மோதி பல முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.  இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி, வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து பலியானார். யாஷிகாவிற்கு கை, கால், இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. காரின் பின் இருக்கைகளில் இருந்த ஆண் நண்பர்கள் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர். யாஷிகாவும் வள்ளிசெட்டி பவனியும் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆண் நண்பர்கள் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; யாஷிகா மீது வேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  யாஷிகாவுக்கு வலது காலில் அறுவை சி்கிச்சை நடந்துள்ள நிலையில், போலீசார் விசாரணையில் விபத்திற்கான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா ஓட்டி வந்த கார், டாடா ஹேரியர் வகையைச் சேர்ந்தது; இதன் கூரையில் ஒரு திறப்பு இருக்கும். யாஷிகா, மணிக்கு 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

  அதேநேரம் காருக்குள் சத்தமாக பாடல்களை ஒலிக்க விட்டு 4 பேரும் கூச்சலிட்டபடி ஓட்டி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில்தான், முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோழி வள்ளிசெட்டி பவானி, கூரையில் இருந்த திறப்பைத் திறந்து இருக்கையில் ஏறி நின்று கொண்டார்.

  மேலும் பாடல்களுக்கு ஏற்ப அவர் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரது ஆடை, யாஷிகாவின் முகத்தில் பட்டு கண்களை மறைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பதற்றமடைந்த யாஷிகாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய கார், முதலில் இடது பக்கம் சாலையோரம் உள்ள இரும்புத் தடுப்புகளில் மோதியுள்ளது.

  Also Read : பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  சுதாரித்த யாஷிகா, விபத்தை தடுக்கும் முயற்சியாக காரை வலது பக்கம் திருப்பவே அதிவேகத்தில் சாலைத் தடுப்பில் மோதி பலமுறை கார் உருண்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அதேநேரம் காரின் திறப்பில் வள்ளிசெட்டிபவனி நின்று கொண்டு வந்ததால் மோதிய வேகத்தில் அவர் காரை விட்டு வெளியே துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்கின்றனர் போலீசார்.

  பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் நண்பர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பல முறை கார் உருண்டும் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர். அதேநேரம் யாஷிகாவும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்ததால் அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதற்கிடையே, யாஷிகா கார் ஓட்டிச் செல்வது போல, சில விநாடிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. அதில் யாஷிகா தனது தோழி வள்ளியோடு இருப்பது போன்ற போட்டோக்களும் உள்ளன. ஆனால் இந்த காட்சி, விபத்து நடந்த நாளன்று எடுக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

  காரின் முன்பக்கம் அதிக சேதாரத்திற்கு உள்ளாகாமல், பக்கங்கள் சேதமடைந்துள்ளன. அந்தப் பகுதியில் தனியார் சிசிடிவிக்கள், காவல்துறை சிசிடிவிக்கள் இயங்கும் நிலையில் உள்ளன. ஆனால் இந்த விபத்தைப் பொருத்தமட்டில் போலீசார் எந்த சிசிடிவி காட்சியையும் வெளியிடவில்லை. இதுகுறித்து கேட்டபோது அந்தப் பகுதியில் சிசிடிவிக்களே இல்லை என்றும் சிசிடிவிக்கள் செயல்படவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வருகின்றனர்.

  Also Read : சன் டிவி வேண்டாம்... வேறு சேனலுக்கு தாவிய குஷ்பு

  இந்த நிலையில் யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரைத்துள்ளனர். சிகிச்சையில் உள்ள யாஷிகா, குணமடைந்த பிறகு கைது செய்யப்படலாம் என்று்ம் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா விபத்து குறித்து சமூக வலைதளங்களி்ல் பல கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையே ஒரு ஆபத்தான சாலை என்றும் அதில் இவ்வளவு அதிவேகத்தில் கார் ஓட்டுவது முட்டாள் தனம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

  மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் கண்மூடித்தனமாக கார் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். யாஷிகா விபத்தில் நடந்தது என்ன என்பதை போலீசார் வெளியிடுவார்களா? கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் கண்காணிப்பு அதிகமாகுமா? என்ற கேள்விகளும் எழ தொடங்கி உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: