உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.... திமுகவினரை சாடிய நடிகை விந்தியா

உயிருடன் இருக்கும் நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியுள்ளார் நடிகை விந்தியா

  • Share this:
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை விந்தியா 1999-ம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

பின்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012-ம் ஆண்டு விந்தியா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார். பின்னர் வட்டப்பாறை உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களி நடித்த விந்தியா நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

2011-ம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின்  கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.இந்நிலையில் திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கும் அவர் திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்து போய்விட்டார்கள் போல என்றும் ஆண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: