துணை முதல்வர் வீட்டுக்கு நடிகை ரோஜா திடீரென சென்று அவர் குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
உடனே தமிழக துணை முதல்வரைப் பற்றி நினைக்காதீர்கள். நாம் இங்கே சொல்ல வருவது ஆந்திர துணை முதல்வரின் வீட்டில் நடந்த விஷயத்தைப் பற்றி. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் புஷ்பா ஸ்ரீவாணி. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், அம்மாநிலத்தில் 5 துணை முதல்வர்களில் ஒருவராகவும் அங்கம் வகித்து வருகிறார். 34 வயதாகும் புஷ்பா அமராவதி மாவட்டம் போலவரத்தில் வசித்து வருகிறார்.
சமூக அக்கறை நிறைந்த புஷ்பா குருபாம் தொகுதியில் எண்ணற்ற சமூக பணிகளில் ஈடுபட்டவர். அதன்மூலம் தொகுதி மக்களின் நேரடியான பாராட்டைப் பெற்றார். டிக்டாக் பிரியையான புஷ்பா, ஜெகன் மோகன் குறித்து பாடிய பாட்டு, இப்போதும் படு பிரபலம். இதனால் சமூக வலைதளங்களில் புஷ்பாவின் பெயர் அடிபட, அதன் மூலம் ஜெகன் மோகனின் கவனத்துக்கும் சென்றார். இதையடுத்து அரசியலிலும் நுழைந்தார்.
பின்னர் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள குருபாம் சட்டப்பேரவை தொகுதியில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வரும் ஆகி விட்டார். புஷ்பாவின் கணவர் சத்ருசர்லா பரிக்சித் ராஜு. வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்தத் தம்பதிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அவருக்கு முதல்வர் ஜெகன் மோகனும், ஒய்.எஸ்.ஆர் கட்சியினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகையும் ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா, புஷ்பாவின் குழந்தையைப் பார்க்க நேராக அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். தொட்டிலில் இருந்த குழந்தைக்கு விபூதி பூசி விட்டு, தூக்கிக் கொஞ்சியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புஷ்பா ஸ்ரீவாணி, வீட்டுக்கு வந்த ரோஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்