நடிகை நிவேதா தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகை நிவேதா தாமஸ்

  • Share this:
இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தமாக 8,61,424 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் பிரசாரத்துக்குச் செல்லும் வேட்பாளர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

மேலும் திரைத்துறை பிரபலங்களான லோகேஷ் கனகராஜ், ஆலியா பட், ரன்வீர் கபூர், அமீர் கான் உள்ளிட்டோர் சமீபத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். அதேபோல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் மாதவன் தனது குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்த நிவேதா தாமஸ், தர்பாரில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.முன்னதாக 96 படத்தில் த்ரிஷாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை கவுரி கிஷானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: