வைரலாகும் நடிகர் விவேக் குறித்து விஜய் பேசிய வீடியோ

வைரலாகும் நடிகர் விவேக் குறித்து விஜய் பேசிய வீடியோ

நடிகர் விவேக்

நடிகர் விவேக்கின் மரம் நடும் செயல் குறித்து நடிகர் விஜய் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    பிகில் திரைப்பட நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் மேடையில் விவேக் மரம் நடுவது குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். அப்போது, பொதுவாகவே குழிபறிக்கும் வேலையே யாராவது செய்தால் அவர் மீது நமக்கு கோபம் வரும். ஆனால், இவர் குழி பறிக்கும் போது மட்டும் இவர் மீது மரியாதை வருகின்றது.

    அவர் மரம் நடும் விஷயத்தை பற்றி நான் கூறுகின்றேன். ரொம்ப பெரிய விஷயம் ஒரு நடிகனாக சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, செயலிலும் இறங்கி, செயல்படவும் வைத்து விட்டார் சூப்பர் என கூறியுள்ளார்.

     

     



     

    சின்ன கலைவானர் விவேக் தன்னுடைய 59-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.1961-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விவேக் பால்ய காலத்திலேயே புத்தக வாசிப்பின் மீதும் கலைத்துறையின் மீதும் தீரா காதல் கொண்டிருந்தார். இதைதொடர்ந்து சென்னை நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவரை மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

    தான் தோன்றிய முதல் படத்திலேயே சமூக அவலங்களை சிறு சிறு பன்ச்களால் பகடி செய்த விவேக், பின்னாளில் அதையே தனக்கான அடையாளமாக மாற்றிகொண்டார். தொடர்ந்து புது புது அர்த்தங்கள், உழைப்பாளி, வீரா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த விவேக்கிற்க்கு அஜித்துடன் நடித்த காதல் மன்னன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. ஒரு தனி நபராக நகைச்சுவையில் விவேக் கோலோச்சிய முதல் படமும் அதுதான்.

    தொடர்ந்து விஜய், அஜித், பிரசாந்த் என அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நகைச்சுவையில் தனி ராஜாங்கமே நடத்திய விவேக் ஒரு கட்டத்தில் ஹீரோக்களுக்கு இணையான புகழையும் வரவேற்பையும் பெற்றார். நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கவும் செய்தார் விவேக். திருநெல்வேலி, பாளையத்து அம்மன், காதல் சடுகுடு போன்ற படங்களில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் சாமி படத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் சந்தித்த வேளை, திருமலை படங்களில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் என தன்னுடைய கதாபாத்திரங்களின் வழியாக சமூக சீர்த்திருத்தங்களுக்கான கருத்துக்களை அழுத்தமாக பேசினார். இதன் காரணமாகவே விவேக்கை சின்ன கலைவானர் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்தனர்.

    ரஜினிகாந்த் தொடங்கி சிம்பு, தனுஷ் இன்றைய தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாண் வரை அத்தனை முன்னணி நடிகர்களுடனும் பயணித்த விவேக் 34 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் கலை பயணத்தை கௌரவிக்கும் வகையில் 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறையும், பிலிம்பேர் விருதை 3 முறையும் வென்றிருக்கிறார் விவேக்.

    வெள்ளைப்பூக்கள், தாராளபிரபு என அண்மை காலமாக குணச்சித்திர வேடங்களில் தனது புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி வந்த விவேக் தற்போது யாரும் எதிர்பாரா விதமாக இயற்கை எய்திருப்பது எல்லோரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய உடல் மறைந்துவிட்டாலும் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்துக்கான குரலாக காலம் கடந்தும் ஒலித்துகொண்டிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
    Published by:Sankaravadivoo G
    First published: