Actor Vivek: மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி

விவேக் - உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

  • Share this:
    நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பிறகு தான் தெரிய வரும் என, நேற்று மாலை மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

    அவர் எப்படியும் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி, சிகிச்சை பலனின்றி இன்று காலை விவேக்கின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதையடுத்து விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்ட விவேக்கின் உடலுக்கு, திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நேற்று மதுரை சென்றிருந்தார் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். விவேக்கின் மறைவை அறிந்து இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கலை பதிவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை வந்த உதயநிதி ஸ்டாலின் விவேக் உடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார். மீண்டும் மதுரை திரும்பும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: