Actor Vivek: சின்னக் கலைவாணர் விவேக்கின் திரைப்பயணம் ஒரு பார்வை!

நடிகர் விவேக்

சின்னக் கலைவாணர் என்று ப்ரியத்துடன் அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று காலமானார். தமிழக மக்களை 34 வருடங்கள் தனது திறமையால் மகிழ்வித்த அவர் இன்று நிரந்தர ஓய்வு கொண்டார். தமிழகத்துக்கும், கலைக்கும் இது பேரிழப்பு.

 • Share this:
  சின்னக் கலைவாணர் என்று ப்ரியத்துடன் அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று காலமானார். தமிழக மக்களை 34 வருடங்கள் தனது திறமையால் மகிழ்வித்த அவர் இன்று நிரந்தர ஓய்வு கொண்டார். தமிழகத்துக்கும், கலைக்கும் இது பேரிழப்பு.

  எண்பதுகளின் இறுதியில் செகரட்டரியேட்டில் வேலை செய்து கொண்டே நாடகங்களில் விவேக் நடித்து வந்தார். மெட்ராஸ் ஹியூமர் கிளப்பிலும் அவர் நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. பலமுறை சிறந்த என்டெர்டெயினருக்கான விருதை பெற்றிருக்கிறார். அந்த கிளப்பின் நிறுவனர் கோவிந்தராஜன் அவரை இயக்குநர் பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் விவேக் தன்னை இணைத்துக் கொண்டார். 1987-ல் பாலசந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் படத்தில், நாயகி சுஹாசினியின் சகோதரராக விவேக்கை திரையில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல் படங்களில் நடித்தார். பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த வஸந்தின் முதல் படம் கேளடி கண்மணியிலும் விவேக் நடித்தார்.

  1991-ல் வெளியான நண்பர்கள் படத்தில் விவேக்கின் நகைச்சுவை முக்கியமான அம்சமாக இருந்தது. விவேக் என்ற நகைச்சுவை நடிகர் பெருவாரியான மக்களுக்கு தெரிய வந்த படமாக நண்பர்களை சொல்லலாம்.
  அதன் பிறகு ரஜியின் உழைப்பாளி, வீரா படங்களில் நடித்தார். ஆனாலும், குறிப்பிடும்படியான வேடங்கள் அமையவில்லை. விக்ரமனின் நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள் ஆகிய படங்கள் விவேக்கின் மீது வெளிச்சம் பாய்ச்சின. தொண்ணூறுகளை விவேக்கின் கோல்டன் பீரியட் எனலாம். கேயார் இயக்கிய எனக்கொரு மகன் பிறப்பான், வி.சேகரின் பொங்கலோ பொங்கல் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் விவேக்கை சிறந்த நகைச்சுவை நடிகராக நிலைநிறுத்தின.

  1998-ல் வெளியான காதல் மன்னன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் விவேக்கை தனிப்பெரும் நகைச்சுவை நடிகராகவும் அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் விவேக்கும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் நகைச்சுவையை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றனர். அந்தப் படத்தில் விவேக்குக்கும், இயக்குநர் சரணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடைசிவரை அவர்கள் வேறு படத்தில் இணையவே முடியாமல் போனது. திரைப்படங்களுக்கு வெளியே விவேக்கின் பெயர் அதிகம் பேசப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்தது.

  1998 - 1999 விவேக்கின் வருடங்கள். அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். குறிப்பாக வாலி திரைப்படம் அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. 2000-ல் வெளிவந்த குஷி, பெண்ணின் மனதை தொட்டு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பட்ஜெட் பத்மநாபன் போன்ற படங்கள் விவேக்கின் நடிப்பை மேலும் மெருகேற்றின. பட்ஜெட் பத்மநாபனில் அவரும் மணிவண்ணன் - கோவை சரளா கூட்டணியும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தன. அடுத்து வந்த பாளையத்தம்மனில் மதம் மற்றும் சாமியார்கள் குறித்த தனது பகுத்தறிவு கருத்துக்களை ஓங்கி ஒலித்தார். நகைச்சுவையுடன் நல்ல கருத்துக்களை சேர்த்து தருகிறவர் என்ற அடையாளத்தை விவேக்குக்கு தந்த முக்கியமான படமாக அது அமைந்தது.

  தான் நடித்த அனைத்துப் படங்களிலும் ரசிகர்களை அவர் சிரிக்க வைத்தார். 2002-ல் வெளியான ரன் படத்துக்காக தனது முதல் ஃபிலிம்பேர் விருதை அவர் பெற்றார். தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் இப்படம் பெற்றுத் தந்தது.

  தூள் படத்தில் அவரும் மயில்சாமியும் இணைந்து ஒரு நகைச்சுவை திருவிழாவையே நடத்தினர். இன்னொரு படம் பார்த்திபன் கனவு. தேவதர்ஷினியுடன் விவேக் இந்தப் படத்தில் நகைச்சுவையின் இன்னொரு பரிமாணத்தை காட்டினார். பாய்ஸ் படத்தில் குணச்சித்திர நடிப்பை வழங்கினார்.

  நகைச்சுவை நடிப்பின் உச்சத்தில் இருந்தவேளை விவேக்கையும் ஹீரோ ஆசை தாக்கியது. 2004-ல் சொல்லி அடிப்பேன் படத்தில் ஹீரோவாக நடித்தார். சாயா சிங், தேஜாஸ்ரீ என இரு நாயகிகள். ஆர்ப்பாட்டமாக போட்டோஷுட் நடத்தினார். டூயட், சண்டை எல்லாம் உண்டு. ஆனால், படம் தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் கடைசி வரை வெளிவரவில்லை.

  சரியாக பத்து வருடங்கள் கழித்து 2014-ல் விவேக் ஹீரோவாக நடித்த, அவன்தான் பாலா வெளியானது. விவேக்கிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நகைச்சுவை. ஆனால், அவர் சீரியஸ் வேடத்தை எடுத்துக் கொண்டார். படத்தை ரசிகர்கள் ஆதரிக்கவில்லை. தனது சீரியஸ் வேடம் தான் தோல்விக்கு காரணம் என்று பாலக்காட்டு மாதவன் என்ற நகைச்சுவை படத்தில் நடித்தார். அப்படமும் சுமாராகவே போனது. முயற்சி திருவினையாக்கம் என்பது போல் 2019-ல் அவர் நாயகனாக நடித்த வெள்ளைப்பூக்கள் த்ரில்லர் திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்று ஓரளவு லாபமும் சம்பாதித்தது.

  காலஓட்டத்திற்கு இணையாக பயணிக்க முடியாமல் போகும் போது சீனியர் நடிகர்கள் தொய்வை சந்திப்பது வழக்கம். ஆச்சரியமாக அதனை கடந்தார் விவேக். வேலையில்லா பட்டதாரியில் தனுஷுடன் இணைந்து நடித்தார். விவேக் - செல் முருகன் கூட்டணியின் நகைச்சுவை, படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வைத்தது. அதேபோல் படிக்காதவன் படமும்.

  விவேக் தனது குரல் மாடுலேஷனை வைத்து காமெடி செய்திருக்கிறார். சுருளிராஜன் போன்ற நடிகர்களை இமிடேட் செய்து நகைச்சுவையை உருவாக்கியிருக்கிறார். பராசக்தி, தசாவதாரம், முதல் மாpயாதை போன்ற படங்களின் காட்சியை, கதாபாத்திரங்களை இமிடேட் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். தமது பல்துறை திறமையால் ரசிகர்களை மகிழ்வித்த கலைஞர்கள் சரித்திரத்தில் அரிதாகவே இருக்கிறார்கள். அதில் ஒருவர் நமது சின்னக் கலைவாணர் விவேக். காலம் ஒரு மகத்தான கலைஞனை இழந்திருக்கிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: