விவேக்கின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்

வைரமுத்து, நடிகை கஸ்தூரி,மயில்சாமி

நடிகர் விவேக்கின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து, பாண்டியராஜன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் சூரி, நடிகை கஸ்தூரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு விவேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர்.பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  தமிழ் திரையுலகம் நீண்ட காலமாக சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்து விட்டதாக, நடிகர் விவேக்கின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நகைச்சுவை நடிகர்களில் தனித் தடம் பதித்தவர் விவேக் என புகழாரம் சூட்டினார்.

  விவேக்கின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள நடிகை கஸ்தூரி, தமிழக மக்களுக்கு இன்று ஒரு கருப்பு தினம் என தெரிவித்துள்ளார். அற்புதமான கலை மகனை தமிழ் சினிமா இழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை என்றும் நடிகர் விவேக்கிடம் பகிர்ந்து கொண்ட பல மறக்கமுடியாத நினைவுகளும், தருணங்களும் தனது சிந்தனையில் ஓடிக் கொண்டே இருப்பதாகவும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, தர்ம சிந்தனை கொண்ட அண்ணன் மறைந்துவிட்டதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார். நடிகர் என்பதை காட்டிலும் சிறந்த சமூக ஆர்வலராக விளங்கியவர் விவேக் என, ஆடுகளம் நரேன் தெரிவித்துள்ளார். விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த தம்பி விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, வார்த்தைகள் இல்லை என நடிகர் சத்தியராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விவேக்கை இழந்து வாடும் கோடிக்கணக்கவர்களில் தானும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளார்.

  அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடிய நபர் மறைந்துவிட்டதாக, நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்காக வாழ வேண்டும் என கூறியதோடு வாழ்ந்தும் காட்டியவர் விவேக் என, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக்கின் உடலுக்கு நடிகர் சூரி நேரில் அஞ்சலி செலுத்தினார், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்த அண்ணன் விவேக் காமெடி நடிகர் அல்ல, அவர் ஒர் உண்மையான ஹீரோ என குறிப்பிட்டார். துவண்டு கிடந்த பல சமயங்களில் தனக்கு உறுதுணையாக இருந்த முக்கிய நண்பரான விவேக்கை இழந்துவிட்டதாக, நடிகர் நாசர் வேதனை தெரிவித்துள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: