Actor Vivek: சின்னக் கலைவாணருடன் ஒரு சிரிப்புப் பயணம்!

Actor Vivek: சின்னக் கலைவாணருடன் ஒரு சிரிப்புப் பயணம்!

விவேக்

நடிகர் விவேக்கின் மறக்க முடியாத நகைச்சுவை வசனங்களில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

  • Share this:
    "கட்டில் உடைஞ்சா படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சா பார்க்க முடியாது. ஆனா, முட்டையை உடைச்சாதான் ஆம்லெட் போட முடியும். என்னே ஒரு சிந்தனை!"

    விரலை வாய்க்குள் வைத்து 'டொப்' என்று சத்தம் எழுப்பிய அந்த கண்ணாடி போட்ட ஒல்லி இளைஞனிடம் எதுவோ இருந்தது. ஆரம்பத்தில் சின்னச் சின்ன உதிரி கதாபாத்திரங்கள். அடித்து ஆடத் தொடங்கியது தொண்ணூறுகளின் இறுதியில். மெல்லிசை மன்னருடன் இணைந்து செய்த லூட்டி, சரித்திரம்.

    "இலை என்ன உன் தலைன்னு நினைச்சியா, ஒண்ணுமே இல்லாம இருக்கிறதுக்கு. சிம்பிள் லாஜிக். இலையை இப்படிப் போட்டாத்தான் வலது கை பக்கம் அகலமாகவும் இருக்கும், பிசைஞ்சு சாப்பிட வசதியாகவும் இருக்கும்." - மெல்லிசை மன்னர்.

    "அப்போ இடது கையில சாப்பிடறவன் என்ன பண்ணுவான்?"

    மின்னலேயில் நக்கல் இன்னும் மிளிர்ந்தது.

    "டேய் எலுமிச்சம் பழத்தை எதுக்குடா எடுத்த?"
    "அங்க தொங்கிட்டிருந்திச்சி. கேரா இருக்கேன்னு எடுத்து சாப்டேன். ஆமா இதை ஏண்டா லாரி முன்னால தொங்கவிட்டிருக்கீங்க?"
    "லாரி நல்லா ஓடணும்னு ஓனர் தொங்கவிட்டிருக்கான்."
    "அடப்பாவி, உள்ளுக்குள்ள எழுநூத்தம்பது ஸ்போர் பார்ட்ஸ் இருக்கு. அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஓடப்போகுது"

    'எபிக்' என்றால் அது ரன். கருத்து கலப்பில்லாத நூறு சதவீத நக்கல்.

    "என்னய்யா கால் ரொம்ப சூம்பிப் போய் இருக்கு. போலியோ அட்டாக் ஆன கோழியா? "
    "நீ தர்ற அஞ்சு ரூபாய்க்கு யானைக்காலையா வைப்பான்."
    "ஏப்பம் விடும்போது அடிக்கடி கா கான்னு வருது."
    "என்னா துன்ன?"
    "அஞ்சு ரூபா பிரியாணி சாப்டேன்."
    "அஞ்சு ரூபா பிரியாணியா? காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும்?"

    கூவத்தில் குளித்தெழுந்த பின்னும் நக்கல் மாறவில்லை. பரிதாபம் கொண்டு அழுக்கை கழுவிவிடுகிறாள் முன்பின் அறியாத ஒருத்தி.

    "முதல்வர் அர்ஜுன் மாதிரி ஆக்கிவிட்டுட்டான் தாயே. கொஞ்சம் ஹாட் வாட்டர் இருக்குங்களா? பரவாயில்லை மெட்ராஸ்ல தண்ணி கிடைக்கிறதே கஷ்டம். ஊத்து... கார்ப்பரேஷன் வாட்டரா? இவ்வளவு உப்பா இருக்கு. கடல்லயிருந்து டைரக்ட் கனெக்ஷன் போலிருக்கு.... அழுக்கெல்லாம் போயிடுச்சா தாயே. அழுக்கு போயிடுச்சா... அப்புறமும் ஏன் தேய்ச்சுகிட்டு இருக்கே. கிராஜுவேட் பாடிங்கிறதால தேய்ச்சு கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கறியா?"

    பட்டணம் வந்து இருந்ததை பறிகொடுத்து பாவாடையுடன் நின்றிருப்பவனை, ஜனங்கள் சாமியாராக்கியது, பாளையத்து அம்மன் யாகாவா முனிவர் என ஜனங்களின் கடவுள் மயக்கத்துக்கு அடித்த வேப்பிலைகள் ஏராளம்.
    தமிழ் மேல் தணியாத தாகத்தில் எடுத்தது வைரமுத்து அவதாரம்.

    "ஆட்சியை ஆச்சிங்கிறா, பழத்தை பலம்ங்கிறா இதெல்லாம் தமிழா...?"
    "இதுதான் இப்போ ட்ரெண்ட். யூ கெட் அவுட்."
    "தமிழுக்கு கெட் அவுட்டா. அப்படின்னா ஆங்கிலத்துக்கு கட்அவுட்டா?"

    உடம்பெல்லாம் வியாதி வைத்திருப்பவனுக்கு ஓர் ஆசை.

    "ஒரே மருந்தில் எல்லா வியாதியும் குணமாகணும்."
    "ஏண்டா சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல உன் இரண்டு கண்ணும் அவிஞ்சுப் போச்சி, ஒரு காது தீய்ஞ்சி போச்சி, கை ரெண்டும் ஓய்ஞ்சி போச்சி, நெஞ்சு டிபியில காய்ஞ்சு போச்சி, சீட்டு மூலத்துல தேய்ஞ்சு போச்சி, பத்தாததுக்கு கால்ல ஆணி பாய்ஞ்சு போச்சி... இது எல்லாமே உனக்கு ஒரு மருந்துல குணமாகணும்...?"

    கரண்ட் கட்டான நேரத்தில் பிச்சைக்கார பெண் கண்ணுக்கு தெரிந்தது மாடர்ன் பெண்ணாக...

    "மூடி வச்ச பிரியாணியை மூணு நாள் கழிச்சு ஓபன் பண்ண மாதிரி அதென்ன வாடை?"
    "அதுவா, வர்ற வழியில ஒரு கல்யாண வீட்ல பிர்ர்யாணி சாப்டேன்."
    "நாளைக்கு காலையில கெட்டி சட்னியும் செட் தோசையும் வாங்கித் தர்றேன்."
    "அய்ய சோறு சோறு... சாரு சோறு வாங்கித் தர்றாரு. சினேகிதனே... சினேகிதனே... ரகசிய சினேகிதனே...."
    தியேட்டரில் சிரிப்பு சில்லறையாக சிதறியது.

    கைப்புள்ள டான் ஆளைத்தூக்க கிளம்பியது ஆந்திராவுக்கு.

    "அசால்டு ஆந்திரால கால வச்சிட்டான். இனி நடக்கப் போறதுக்கு நான் பொறுப்பில்ல. தம்பி நான் பயங்கரமான ரவுடி. என்னோட ஆவேசம் அடங்குறதுக்குள்ள நேரா அந்த ரெட்டி வீட்டுக்குள்ள போய் அங்க ஒரு கேரள கதகளி ஆடி, அந்த ஆந்திரா கிளியை அலாக்கா தூக்குறோம். அசால்ட் ஆக்ஷனுக்கு ரெடியாயிட்டான் ஆஃப் பிளேட் பிரியாணியை லெக் பீஸோட ரெடி பண்ணி வை."

    டான் ஆடிய கதகளியில் ரசிகர்கள் கலகலத்தார்கள்.

    அது மட்டுமா. கலைஞர் குரலா? பேசுவார், சுருளிராஜனின் குழைவா? நடிப்பார். சிவாஜியின் தமிழா? முழங்குவார். 34 வருட நெடிய பயணத்தில் அவர் புனைந்த வேடங்கள், உரைத்த கருத்துகள், சிரிக்க வைத்த தருணங்கள் எத்தனையெத்தனை. ஒரு பொறுப்புமிக்க மனிதனாக அவர் வாழ்ந்த வாழ்க்கை நூறாண்டுகள் அவர் பேர் சொல்லும்.

    சின்னக் கலைவாணரே போய் வாருங்கள்... தமிழர்களின் சிரிப்பிலும், சிந்தனையிலும் நீங்கள் எப்போதும் வாழ்ந்திருப்பீர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: