முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து... விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த முக்கிய தகவல்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து... விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த முக்கிய தகவல்!

விஷால், எஸ்.ஜே.சூர்யா

விஷால், எஸ்.ஜே.சூர்யா

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும்.

இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் Pan Indian  திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முந்தினம் இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர்.

லாரி நிற்காமல் வருவதை பார்த்த தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். இதன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ’ஒரு சில நொடிகள் மற்றும் ஒரு சில இன்ச் வித்தியாசத்தில் நாங்கள் தப்பித்தோம், கடவுளுக்கு நன்றி என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா கூறியபோது, ‘உண்மையில் கடவுளுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நூலிழையில் உயிர் தப்பினோம். திட்டமிட்டபடி அந்த லாரி நேராக வரவேண்டும், ஆனால் திசை மாறியதால் நாங்கள் உயிர் பிழைத்தோம், அவ்வாறு இல்லை என்றால் இந்நேரம் எங்களால் ட்வீட் செய்திருக்க முடியாது, கடவுள் அருளால் தப்பினோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vishal, S J Suryah